சென்னை: நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர், மாநிலத்துக்கு ஆளுநர் என்பவர் நிச்சயமாக வேண்டும் என்றும், சென்னையில் திமுக மட்டும்தான் போட்டியிட வேண்டுமா? என கூறியுள்ளார்.
2024 மக்களவைத் தேர்தல் சூடிபிடிக்கத் தொடங்கியுள்ளது. வரும் ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தமிழ் நாட்டில் அரசியல் கட்சிகள் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளை தொடங்கி உள்ளன. இந்த நிலையில், தமிழகத்தில் பிராதன கட்சிகளான திமுக – காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு தொடர்பான முதல்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், 2வது கட்ட பேச்சுவார்த்தை வரும் பிப்ரவரி 9ந்தேதி மீண்டும் நடைபெற உள்ளது. இதில் தொகுதி ஒதுக்கீடு இறுதி செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழ்நாடு மற்றும் மத்தியில் அமைய உள்ள கூட்டணி தொடர்பான அரசியல் சார்ந்த கேள்விகளுக்கு அசராமல் பதில் அளித்தார். அதன் விவரம் வருமாறு,
பாஜக ஒரு மதவாத கட்சி. காங்கிரஸ் ஒரு மதச்சார்பற்ற கட்சி என்றவர், அதிகாரத்தில் இல்லை என்று ஒருபோதும் காங்கிரஸ் கவலைப்பட்டது கிடையாது. ஆட்சி அதிகாரம் மாறி மாறி வருவதில் தவறில்லை என்று நமது அரசியலமைப்பு சொல்கிறது. அதிகாரம் என்பது தொடர்ந்து இருக்கவும் கூடாது. ஒருவரே ஆட்சி செய்வது சர்வாதிகார ஆட்சியாக மாறிவிடும். எனவே நாட்டில் ஆட்சி மாற்றங்கள் தேவை என்று தெளிவுபடுத்தினார்.
அதிமுக தொடர்பான கேள்விக்கு, பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது வரவேற்கத்தக்கது. ஆனால் பாஜக கூட்டணியில் இருந்து விலகியதிற்கான காரணத்தை அதிமுக இதுவரை மக்களிடம் தெரிவிக்கவில்லை. எனவே, அதிமுகவினர் நம்பத் தகுந்தவர்களாக இல்லை என்றார். மேலும், வாக்கு வங்கி இருக்கும் இரு கட்சிகள் பிரிந்தால் மட்டும்தான் வாக்கு சிதறும். ஆனால், இங்கு அதிமுகவிடம் மட்டும்தான் வாக்கு இருக்கிறது. பாஜகவிடம் அவர்கள் கட்சி உறுப்பினர்கள் வாக்கு மட்டும்தான் என்று கூறினார்.
திமுக கூட்டணியில் நீங்கள் கேட்கும் தொகுதிகள் கிடைக்குமா என்ற கேள்விக்கு, “பேச்சுவார்த்தை என்பது எங்களுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் தான். அது குறித்து வெளிப்படையாக பேச முடியாது என்றவர், சென்னையில் திமுக மட்டும்தான் போட்டியிட வேண்டுமா?, காங்கிரஸ் கட்சிக்கும் பெற்று தாருங்கள் என்று நிர்வாகிகள் பலர் கேட்கிறார்கள் கூட்டணியில் இது வழக்கமாக பேசப்படுவதுதான்.
ஒரு தொகுதியில் ஒரே கட்சி தொடர்ந்து போட்டியிட்டால் மற்றொரு கட்சிக்கு வாய்ப்பு இருக்காது. அப்போது அந்த கட்சி தொண்டர்கள் நாங்கள் என்ன இவர்களுக்கு வேலை செய்து கொண்டே இருப்பதுதான் நமது வேலையா? என்று கேட்பார்கள். இது தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிக்கும் பொருத்தும். காங்கிரஸ் கட்சியிலும் இது போல கேட்பார்கள் என்றவர், காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன, இதில் எது சரி, எது தவறு என்று தெரியவில்லை, வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் புது முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்றவர், காங்கிரஸ் குறித்து விமர்சனம் செய்த அமைச்சர் ராஜகண்ணப்பனை அவர் சாந்த கட்சியின் தலைமை தான் கண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
தமிழகத்தில் பாஜக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா? என்ற கேள்விக்கு, “கண்ணற்றவர்கள் ஐந்து பேர் ஒரு யானையைப் பரிசோதித்த கதையாக தான் பாஜக அமைக்கும் கூட்டணி இருக்கும் என்றார்.
மக்கள் நீதி மய்யம், திமுக – காங்கிரஸ் கூட்டணியில் இணைய வாய்ப்பிருக்கிறதா? என்ற கேள்விக்கு, “கமல்ஹாசன், ராகுல் காந்தி மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் இருவருக்கும் நெருக்கமானவர். எனவே, கமல் வருகைப் பற்றி மூவரும் சேர்ந்து முடிவு எடுக்க வேண்டும். அதில் நான் பதில் சொல்வதற்கு எதுவுமில்லை”.
கார்த்தி சிதம்பரம் காங்கிரஸ் கட்சித் தலைவர்களை விமர்சித்து வருகிறாரே என்ற கேள்விக்கு, அவரை கண்டிக்காமல், “அவர் தொடர்ந்து அவ்வாறு பேசுவது தவறு என நாசூக்காக பதில் தெரிவித்தார்..
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு இன்னும் புதிய தலைவரே தேர்ந்தெடுக்கவில்லையே, தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் சிக்கல் நீடிக்கிறதா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “பொதுவாக காங்கிரஸ் கட்சியில் மாநில தலைவர்கள் இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் மட்டுமே பதவியில் இருக்க முடியும். நான் இந்தப் பொறுப்புக்கு வந்து 6 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனாலும், தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவராக நீடித்து வருகிறேன். இதனால் புது தலைவர்கள் நியமிக்கப்படுவார்களா என்னும் கேள்வி எல்லோர் மனதிலும் இருக்கிறது.
‘ஆசை வெட்கம் அறியாதது’ என சொல்வார்கள். அப்படி தலைவராகும் ஆசை உள்ளவர்கள் டெல்லிக்குச் சென்று தலைமை சந்தித்து ’எனக்கு வாய்ப்பு கொடுங்கள், நான் திறமையாக செயல்படுகிறேன்’ எனக் கேட்க வேண்டும். அப்படி எதையும் செய்யாமல் சிலர் பேசிக்கொண்டு மட்டுமே இருக்கிறார்கள். அதில் எந்தப் பயனுமில்லை. இன்னொரு தலைவர் நியமிக்கப்பட்டால், அவர்களுக்கு உறுதுணையாக நான் செயல்படுவேன். இதில் தலைமை தான் முடிவு எடுக்க வேண்டும் என்றார்.
ஆளுநர் – அரசு இடையே மோதல் போக்கு தொர்பான கேள்விக்கு, “காங்கிரஸுக்கு ’ஆளுநர் இருக்கக் கூடாது’ என்பது கொள்கை கிடையாது. மாநிலத்துக்கு ஆளுநர் என்பவர் நிச்சயமாக வேண்டும். இந்தியா ஒரு கூட்டாட்சி தத்துவத்தைப் பின்பற்றும் நாடு. அதனால்தான் அனைவருக்கும் அதிகாரம் வரையறுக்கப்பட்டு இருக்கிறது. அதை மீறினால் ஆளுநர் ஆர்.என்,ரவியைப் போல் அசிங்கப்படுவார்கள்” என்றார்.
கூட்டணி கட்சிகளால் இண்டியா கூட்டணிக்குப் பாதிப்பா? என்ற கேள்விக்கு, “மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால், நிதிஷ் குமார் ஆகியோர் வெளியேறியது இண்டியா கூட்டணிக்கான முடிவல்ல. இவர்கள் மீண்டும் எங்களோடு இணைய மாட்டார்கள் என்று நான் சொல்லவில்லை. அவர்கள் மீண்டும் கூட்டணிக்குள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
நிதிஷ் குமார் நல்ல தலைவர். ஆனால், நல்லவர்களுக்கு ஆசைகள் இருக்கக் கூடாது என்பதல்ல. ‘அவருக்கு பிரதமராக வேண்டும்’ என்பதுதான் ஆசை. அவருக்கு அந்த எண்ணம் இருப்பதில் தவறில்லை. அதற்கு அவர் தகுதியானவர்தான். ஆனால், அதைக் கூட்டணி கட்சிகளும் ஏற்கவேண்டும்.
அவருடைய துரதிஷ்டவசத்தால் யாரும் அவரை பிரதமர் வேட்பாளராக முன்மொழியவில்லை. அவர் ஒரு பக்கம் சோசியலிசம் பேசுவார். மறுபக்கம், அத்வானி உடன் நெருக்கமாக இருப்பார். இதனால், நிதிஷ் குமாரைப் பாஜக பயன்படுத்திக் கொண்டது.
நிதிஷ் குமாருடன் பாஜக இணைந்ததால் பாஜகவுக்குத் தான் பலவீனம். விரைவில் நிதிஷ் குமார் பாஜக விட்டு வெளியேற வாய்ப்பிருக்கிறது. பாஜக கட்சிக்கு கொள்கை கிடையாது. அவர்களை எதிர்த்தவர்களே திரும்பி வந்தாலும் சேர்த்துக் கொள்வார்கள். ’சாக்கடையில் விழுந்த பிறகு, இந்த சாக்கடை எங்கிருந்து வந்தது என்பதை பற்றி எல்லாம் ஆராயாமல் அதிலே தங்கிடுவோம்’ என பாஜக முடிவு செய்துவிட்டது.”
மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு தொடர்பான என்ற கேள்விக்கு, “தேர்தல் கூட்டணியில் இரு கட்சிகளும் ஆதாயம் இருக்க வேண்டும். அதற்கு பெயர்தான் கூட்டணி. ’ஒரு கட்சிக்குத்தான் ஆதாயம், மற்றொரு கட்சிக்கு இல்லை’ என்றால் இதற்கு கூட்டணி அவசியமில்லை. இந்தியா முழுவதிலும் இருப்பது கட்சி காங்கிரஸ்தான். ஆனால், ’அவர்கள் கேட்கும் தொகுதிகளை நாங்கள் கொடுக்க முடியாது’ என மேற்கு வங்கத்தில் மம்தா சொல்கிறார். இதை காங்கிரஸின் அடிமட்ட தொண்டர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
காங்கிரஸ் கட்சிக் குழுவிடம் ’உங்கள் கருத்து என்ன வேண்டும்?’ என மம்தா கேட்டிருக்க வேண்டும். அதுதான் நியாயமும் கூட. ஆனால், வெளிப்படையாக ’இரண்டு தொகுதிகள் மட்டுமே கொடுப்பேன்’ என மம்தா கூறியதற்குப் பின் பேச்சுவார்த்தை எதற்காக நடத்த வேண்டும் என அடிமட்ட நிர்வாகிகள் கேட்கிறார்கள். அவர்கள் கேட்பது நியாயமானது தானே.
இடதுசாரிகள் கொள்கை ரீதியிலான எங்களுடன் கூட்டணியில் இருக்கிறார்கள். அந்த ஊரில் சீதாராம் யெச்சூரியை விட்டுவிட்டு தேர்தலை நாங்கள் சந்திக்க மாட்டோம். மம்தா பானர்ஜிக்கு யெச்சூரியைப் பிடிக்காது. அதற்காக இடதுசாரிகளை எங்களால் தியாகம் செய்ய முடியாது. இடதுசாரி கட்சியிகள் எடுத்த முடிவில் உறுதியாக் நிற்பார்கள். ஆனால், மம்தா போன்றவர்கள் சந்தர்ப்பவாதிகள். எனவே, மம்தா
முன்னதாக நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக காங்கிரஸ் இடையேயான பேச்சுவார்த்தை திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் ஜன. 28 ந்தேதி அன்று நடைபெற்றது. இதில் திமுக சார்பில் டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவில் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, திருச்சி சிவா, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர். காங்கிரஸ் தரப்பில் முகுல் வாஸ்னிக், சல்மான் குர்ஷித், அஜோய் குமார், கே.எஸ்.அழகிரி, செல்வபெருந்தகை ஆகியோர் கலந்து கொண்டனர். சுமார் ஒரு மணி நேரம் தொகுதி பங்கீடு தொடர்பான முதல் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. பின்னர் காங்கிரஸ் கட்சியினர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது கூறிய கே.எஸ்.அழகிரி, “திமுகவுடன் நடத்திய பேச்சுவார்த்தை திருப்தி அளிக்கிறது. 40 தொகுதிகளிலும் எப்படி வெற்றி பெறுவது, பாஜக, அதிமுக-வை எப்படி வீழ்த்துவது என முதல்கட்ட பேச்சு வார்த்தையில் பேசப்பட்டது. மேலும் கூட்டணி கட்சிகளை எப்படி மகிழ்ச்சியாக வைப்பது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது” எனத் தெரிவித்தார். மேலும், “21 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடும் என்ற செய்தி பொய்யானது என்று கூறியதையடுத்து, 21 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுவதாக விருப்பம் தெரிவித்த செய்தி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இருந்து லீக் ஆனது தான் என செய்தியாளர்கள் கூறியதற்கு, “காமராஜர் கட்டிய கட்டிடம் எவ்வளவு தண்ணீர் ஊற்றினாலும் லீக் ஆகாது” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.