அசாமைச் சேர்ந்த இந்தியாவின் முதல் பெண் யானை பராமரிப்பாளர் (பாகன்) பர்பதி பருவா-வுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படுகிறது.
இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னாவுக்குப் பிறகு பத்ம விருதுகள் மிக முக்கியமான கௌரவமாகக் கருதப்படுகிறது. இவை பத்ம விபூஷன், பத்மபூஷன், பத்மஸ்ரீ என மூன்று வகைகளாக வழங்கப்படுகின்றன.
பத்மஸ்ரீ விருது நாட்டின் நான்காவது உயரிய சிவிலியன் விருதாகும். இந்த ஆண்டு பத்மஸ்ரீ விருதுக்கு 110 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 34 பேர் அதிகம் பிரபலம் இல்லாதவர்கள்.
அந்த வகையில் சமூகப் பணிக்காக (விலங்குகள் நலன்) அசாமைச் சேர்ந்த பர்பதி பருவா-வுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
67 வயதான பர்பதி பருவா தனது 14வது வயதில் இருந்து கௌரிபுவின் அரச குடும்பத்தைச் சேர்ந்த தனது தந்தை மறைந்த பிரகிருதிஷ் சந்திர பருவாவிடமிருந்து காட்டு யானைகளைப் பிடிப்பதற்கும் மற்றும் அடக்கும் திறமையை கற்றுக்கொண்டார்.
கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக பல காட்டு யானைகளின் உயிரைக் காப்பாற்றுவதிலும் பராமரிப்பதிலும் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
மிகவும் வசதியான பின்னணியில் இருந்து வந்த போதும் எளிமையான வாழ்க்கை முறையை தேர்ந்தெடுத்து யானைகளை பராமரிப்பதில் அக்கறை காட்டி வரும் பர்பதி பருவா-விடம், யானைகளை ஏன் இவ்வளவு பிடிக்கும் என்று ஒருமுறை அவரிடம் கேட்டபோது, ’யானைகள் மிகவும் உறுதியானவை, விசுவாசம், பாசம் மற்றும் ஒழுக்கம் கொண்டவையாக இருப்பதால் இருக்கலாம்’ என்று கூறியிருந்தார்.