சென்னை: நாளை முதல் 4 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால், சொந்த ஊர் செல்லும் பயணிகளுக்காக வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் 580 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்து உள்ளது.
தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில், வார விடுமுறை மற்றும் பண்டிகை கால விடுமுறைகளின்போது சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இந்த நிலையில், தற்போது தைப்பூசம், குடியரசு தினங்களை ஒட்டி 4 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால், சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக அறிவித்து உள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு, விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் கே.இளங்கோவன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஜன.25-ம் தேதி தைப்பூசம், 26-ம் தேதி குடியரசு தினம், அடுத்து சனி, ஞாயிறு என 4 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. இதை கருத்தில்கொண்டு, சென்னையில் இருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு 24, 25-ம் தேதிகளில் வழக்கமான பேருந்துகளுடன் கூடுதலாக 405 சிறப்பு பேருந்துகள், கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம், பெங்களூரு போன்ற இடங்களில் இருந்து பிற முக்கிய இடங்களுக்கு 175 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 580 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.