சென்னை

இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு கூட்டம் கமலஹாசன் தலைமையில் நடைபெறுகிறது. 

விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. எனவே தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் விறுவிறுப்பாக ஈடுபட்டு உள்ளன. ஒவ்வொரு கட்சிகளும் தேர்தல் பணிக்குழு, தொகுதி பொறுப்பாளர்கள் என பல்வேறு நிலைகளை உருவாக்கி பணியாற்றி வருகின்றன.

அவ்வகையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் தலைமையில், நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அந்த கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று காலை 11.30 மணிக்கு நடைபெறுகிறது. கூட்டத்தில், நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் ஆலோசனை நடத்த இருப்பதாகக் கூறப்படுகிறது.

வரும நாடாளுமன்றத் தேர்தலில், இந்தியா கூட்டணியுடன், தேர்தல் கூட்டணி அமைப்பதா அல்லது தனித்து களம் காண்பதா என்பது குறித்து முக்கிய நிர்வாகிகளிடம் கருத்துக் கேட்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன., கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடத்துவதற்கான குழுக்களும், தேர்தல் பணிக்கான குழுக்கள் அமைப்பது தொடர்பாகவும் ஆலோசனை நடத்த இருப்பதாகக் கூறப்படுகிறது.