பத்தினம்திட்டா: மகரவிளக்கு பூஜை காலங்களில், பெண்கள், குழந்தைகள் சபரிமலைக்கு வர வேண்டாம், கூட்டம் அதிகம் இருப்பதால், அவர்கள் மலைக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என சபரிமலை தேவசம் போர்டு அறிவுறுத்தி உள்ளது.
நடப்பாண்டு சபரிமலை அய்யப்பனை தரிசிக்க வரலாறு காணாத அளவில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் அதிக அளவில் வருகை தந்து அய்யப்பனின் அருள்பெற்று செல்கின்றனர். இந்த நிலையில், மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜையின் சிகர நிகழ்ச்சியான பொங்கலன்று பெரியும் மகர விளக்கு ஒளியை கண்டு தரிசிக்க மேலும் பல லட்சம் பேர் திரள்வார்கள். அதாவது, , வரும் 14 மற்றும் 15ம் தேதிகளில் மகர விளக்கு பூஜையை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வர் என எதிர்பார்க்கப்படுவதால், அந்த தேதிகளில் பெண்கள், குழந்தைகள் வரவேண்டாம் என, திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை, தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே வரலாறு காணாத பக்தர்கள் கூட்டம் காரணமாக, கோவிலுக்கு வந்த பின் தரிசனம் மேற்கொள்வதற்கான முன்பதிவு (ஸ்பாட் புக்கிங்) நடைமுறையை, திருவிதாங்கூர் தேவசம் போர்டு நிறுத்தி உள்ளது. மகர விளக்கு பூஜை அன்றைய தினம் முதல், ‘ஆன்லைன்’ முன்பதிவு மட்டுமே நடைமுறையில் உள்ளது. மகர விளக்கு பூஜை நாளான, வரும் 15ம் தேதிக்கான தரிசனத்துக்கு, 40,000 பக்தர்களுக்கு மட்டுமே, ‘ஆன்லைன்’ முன்பதிவு வழங்கப்பட்டு வருகிறது. அதற்கு அடுத்த நாளான ஜன., 16ல், 50,000 பக்தர்களுக்கும், ஜன., 17 முதல் 20ம் தேதி வரை நாள் ஒன்றுக்கு 60,000 பக்தர்களுக்கும், ‘ஆன்லைன்’ முன்பதிவு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் பக்தர்கள் சபரிமலை அய்யப்பன் கோவிலில் தரிசனம் செய்து வருகின்றனர். இதில், 80,000 பேர், ‘ஆன்லைன்’ முன்பதிவு முறையில் தரிசனம் மேற்கொள்கின்றனர். இதனால், பக்தர்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.
இந்த நிலையில், ”மகர விளக்கு பூஜையின் போது, பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்பதால், ஜன., 14 மற்றும் 15ம் தேதிகளில் பெண்கள் மற்றும் குழந்தைகள் கோவிலுக்கு வரவேண்டாம்,” என, தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜன., 16 முதல் 20 வரையில், அதிக அளவிலான பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என்றும் அன்றைய தினம் அவர்கள் தரிசனம் செய்யலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அனுமதி இல்லை மகர விளக்கு பூஜை முடிந்த பிறகு, 20ம் தேதி வரை கோவில் திறந்திருக்கும். வரும் 20ம் தேதி இரவு மாளிகைபுரத்தம்மன் சன்னிதியில் குருதி பூஜை முடிந்த பின் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. அதற்கு அடுத்த நாள், பந்தள அரச குடும்பத்தினர் அய்யப்பனை தரிசித்த பின், மண்டல – மகர விளக்கு பூஜை காலம் முடிவுக்கு வந்து கோவில் நடை அடைக்கப்படும்.
இதற்கிடையில், சபரிமலைக்கு இந்த ஆண்டு அய்யப்ப பக்தர்களின் வருகை பல மடங்கு அதிகம். வாகனங்களிலும், நடைபயணமாகவும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். மகர ஜோதி பூஜை ஜன.,15ல் நடைபெற உள்ளதால், கேரள வாகன போக்குவரத்து துறை சார்பில் பல அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கட்டுப்பாட்டு அலுவலகம் வாகன போக்குவரத்து துறை சார்பில் துவக்கப்பட்டுள்ளது.பக்தர்களுக்கு பிரச்னை ஏற்பட்டால், 94460 37100 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.