சென்னை
கடந்த 2023 ஆம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருதுக்கு சுப வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழக அரசு சமுகநீதிக்காக பாடுபடுபவர்களுக்கு ஆண்டுதோறும் தந்தை பெரியார் விருது வழங்கி வருகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருதுக்கு சுப. வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாளை முதல்வர் மு க ஸ்டாலின் விருது வழங்க உள்ளார்.
தந்தை பெரியார் விருத் பெறும் சுப வீரபாண்டியன் குறித்த விவரங்கள் இதோ
சமூகநீதிக்கான “தந்தை பெரியார் விருது” பெறத் தேர்வு செய்யப்பட்டுள்ள சுப. வீரபாண்டியன் திராவிட இயக்கக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர், தந்தை பெரியாரின் பற்றாளர். தமிழக அரசு அமைத்துள்ள சமூக நீதிக் கண்காணிப்புக் குழுவின் தலைவராகச் செயலாற்றி வருகிறார். அவர் ஆரியத்தால் வீழ்ந்தோம், திராவிடத்தால் எழுந்தோம், தமிழியத்தால் வெல்வோம் என்னும் முழக்கத்தை முன்வைத்து, 2007 ஆம் ஆண்டு, திராவிட இயக்கத் தமிழர் பேரவை என்னும் இயக்கத்தை நிறுவியவர்.
தமிழ்ப் பேராசிரியராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற அவர், கல்லூரியில் பணியாற்றும் பொழுதே தமிழ் தமிழர் இயக்கம் என்னும் அமைப்பை உருவாக்கிச் செயல்பட்டவர். தந்தை பெரியாரின் கொள்கைகளான சமூக நீதி, சாதி ஒழிப்பு, ஆதிக்க எதிர்ப்பு, தாய்மொழிப் பற்று, பெண் விடுதலை மற்றும் பகுத்தறிவு முதலான கருத்துகளை உறுதியுடன் செயல்படுத்த வேண்டும் என்பதிலும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். சுப. வீரபாண்டியன் கலைமாமணி விருது பெற்றுள்ளதுடன், இதுவரை 54 நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்.