ஒய்.எஸ்.ஆர்.டி.பி. (ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சி)-யின் தலைவர் ஒய்.எஸ்.சர்மிளா காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்தார்.
காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஷர்மிளா கூறுகையில், காங்கிரஸ் கட்சிக்காக தனது வாழ்நாள் முழுவதும் உழைத்தவர் தனது தந்தை ஒய்.எஸ்.ஆர். கடைசி நேரம் வரை கட்சிக்கு அவர் சேவை செய்ததை நினைவு கூர்ந்தார். இன்று அவரது மகளாக காங்கிரஸ் கட்சியில் இணைந்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.
காங்கிரஸ் கட்சி இன்று நாட்டின் மிகப்பெரிய மதச்சார்பற்ற கட்சியாக உள்ளது என்று அவர் கூறினார். மணிப்பூரில் சமீபத்தில் நடந்த கலவரம் மற்றும் உயிரிழப்புகள் குறித்து அவர் வருத்தம் தெரிவித்தார்.
இந்த சூழ்நிலையில் நாட்டை ஒற்றுமையாக வைத்திருக்க வேண்டிய அவசியம் உள்ளது என்றும், காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே அந்த பொறுப்பும் கடமையும் உள்ளது என்றும் அவர் கூறினார். பாரத் ஜோடோ யாத்திரை மூலம் தனக்கும், நாட்டு மக்களுக்கும் தன்னம்பிக்கையை ராகுல் காந்தி விதைத்துள்ளார் என்றார். அதனால்தான் காங்கிரஸில் இணைந்ததாகவும், ஒய்எஸ்ஆர்டிபி கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்ததாகவும் அவர் விளக்கினார்.
சமீபத்தில் நடந்த தெலுங்கானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதை நினைவு கூர்ந்த ஷர்மிளா, ராகுல் காந்தியை பிரதமராக்க வேண்டும் என்பது தனது தந்தை ஒய்எஸ்ஆரின் கனவு என்றும், அந்த கனவை நிறைவேற்ற கடுமையாக உழைப்பேன் என்றும் ஒய்.எஸ். ஷர்மிளா கூறினார்.