சென்னை: தமிழ்நாடு அரசின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்து சேர்த்து தமிழ்நாடு அரசாணை வெளியிட்டு உள்ளது. இந்த ஆணை அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
கடந்த 2020ம் ஆண்டு அப்போதைய எடப்பாடி தலைமையிலான அதிமுக ஆட்சியின்போது டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண்பகுதியாக அறிவிக்கப்பட்டது. முன்னதாக, 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில், காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மாக அப்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதற்கான சட்ட முன்வரையும் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, அதன்படி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களுடன், கடலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள தலா 5 வட்டாரங்களும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவிக்கப்பட்டன. அந்த பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றப்பட்டது
இதன் காரணமாக, டெல்டா மாவட்டங்களில் செயல்பட்டு வரும் பெட்ரோல் – கேஸ் கிணறுகள் மற்றும் மீத்தேன், ஷேல் கேஸ், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்கள் செயல்படுத்தாத நிலை உருவானது. எடப்பாடி அரசின் இந்த அறிவிப்பு இந்திய அளவில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும், தமிழ்நாட்டில் இதற்கு முன்பு இருந்த வேறு எந்த முதலமைச்சரும் செய்யாத துணியாத சாதனையை நிகழ்த்தியிருப்பதாக விவசாயகிள் பெருமிதம் கொண்டனர்.
இதையடுத்து, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலப் பகுதியில் மயிலாடுதுறை மாவட்டத்தையும் சேர்க்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், திமுக அரசு அதற்கான நடவடிக்கைளை முன்னெடுத்தது.
மயிலாடுதுறை மாவட்டம் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலப் பகுதியில் சேர்த்ததன் மூலம் இனி அங்கு மீத்தேன் மற்றும் ஹட்ரோ கார்பன் போன்ற ஆலைகளுக்கு அனுமதி வழங்கப்படாது.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் பகுதிகளில், வேளாண்மைக்கு நேரடியாக பாதிப்பைத் தரும் எந்த தொழிற்சாலைகளையும் திட்டங்களையும் செயல்படுத்த முடியாது. பேரிழிவு ஏற்படுத்தும் எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டங்களை காவிரி படுகையில் செயல்படுத்த முடியாது. அதிக மாசுபடுத்தும் சிகப்பு பிரிவில் உள்ள மாசுபாடு தர அளவு 60க்கும் மேல் இருக்கும் ஆலைகள் அமைக்க முடியாது. விளைநிலங்களை வீட்டு மனைகளாக மாற்ற முடியாது என்பதோடு, மணல் கொள்ளை பெருமளவு தடுக்கப்படும். விவசாயமும் அதனை சார்ந்த தொழிற்சாலைகள் மட்டுமே அமைக்க முடியும்.
ஹட்ரோ கார்பன் எடுக்க பொதுமக்களிடம் கருத்து கேட்க வேண்டியதில்லை என்பது போன்ற மத்திய அரசின் அறிவிப்புகள், தமிழ்நாட்டைச் சேர்ந்த டெல்டா விவசாயிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அப்போது தான் தமிழக விவசாய நிலங்களை காக்க சிறப்பு சட்டம் இயக்கப்படும் என கடந்த அதிமுக ஆட்சியின் போது அறிவிக்கப்பட்டது.
கடந்த 2020ம் ஆண்டு இதற்கான சட்டமும் இயற்றப்பட்டது. இதற்கு டெல்டா விவாசயிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்த நிலையில், புதியதாக உருவாக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தையும் இதில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதைத்தொடர்ந்து, 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாவில், “பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் மயிலாடுதுறை மாவட்டமும் இணைக்கப்படுகிறது. வேளாண் மண்டலச் சட்டத்துக்குள் வேளாண்மையுடன் கால்நடை பராமரிப்பு மற்றும் உள்நாட்டு மீன்வளமும் சோ்த்துக் கொள்ளப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இச்த மசோதாவிற்கு, அண்மையில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்திய பிறகு அளுநர் ரவி ஒப்புதல் அளித்தார். அதனை தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சேர்த்துள்ளதாக தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்மூலம், இனி மயிலாடுதுறை மாவட்டத்தில் எண்ணெய், மீத்தேன், ஹைட்ரோகார்பன் எடுப்பது போன்ற, விவசாயத்தை பாதிக்கும் எந்தவொரு ஆலைகளையும் நிறுவ முடியாத சூழல் உருவாகியுள்ளது. இது அம்மாவட்ட விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.