சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக 640 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம், வார விடுமுறை மற்றும் பண்டிகை கால விடுமுறைகளின்போது சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது. அதன்படி, சனி மற்றும் ஞாயிறு விடுமுறை தினம் அதனை தொடர்ந்து வரும் பண்டிகை விடுமுறை காரணமாகபொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கும், நிகழ்ச்சிகளுக்கும் பயணம் செய்யும் வகையில், தினசரி பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்கி தமிழக போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த நிலையில், வார விடுமுறை மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகை தொடர் விடுமுறையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக 640 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
தினசரி இயக்கக் கூடிய 2,100 பேருந்துகளுடன் வரும் டிச.22-ல் கூடுதலாக 350 பேருந்துகளும் டிச.23-ல் 290 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது.
சென்னையில் இருந்து நெல்லை, நாகர்கோவில், மார்த்தாண்டம், தூத்துக்குடி, வேளாங்கண்ணிக்கு சிறப்புப் பேருந்து இயக்கப்படும் என அரசு போக்குவரத்து தெரிவித்துள்ளது.