விடாத துரத்தலும் விழுந்த பொன்முடியும்.
சிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன்
மனிதர்களுக்கு மரணம் என்பது எப்படி எப்போது என்பதை கணிக்க முடியாதோ அதேபோலத்தான் ஆட்சியாளர்களுக்கும் வீழ்ச்சியை கணிக்கவே முடியாது.
நேற்று முன்தினம்வரை திமுக அரசாங்கத்தில் கொடிகட்டி பறந்தவர், உயர்கல்வித்துறை அமைச்சர்.
நேற்று அரசாங்க காரில் இருந்து தேசியக் கொடி அகற்றப்பட்டு, நிர்கதி ஆக்கப்பட்டு விட்ட பரிதாபம்.
வருவாய்க்கு அதிகமாக சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடி குற்றவாளி என உயர் நீதிமன்றமே அறிவித்து விட்டதால் இந்த நிலைமை.
திமுகவில் குறுகிய காலத்தில் அதிக செல்வாக்கு பெற்று வளர்ந்தவர் பொன்முடி. வட தமிழகத்தின் ஒரு பகுதியில் முன்னணி தலைவராக இருப்பவர்களிலேயே அதிக பலம் வாய்ந்த தலைவராக திமுகவில் வலம் வந்தவர்.
வளர்ந்த வரலாற்றை தோண்டிப் பார்த்தால், விழுப்புரம் பக்கம் டி.எடையார் என்ற கிராமத்தில் பிறந்து மூன்று எம்.ஏ. பட்டங்களுடன் டாக்ட்ரேட் பெற்று கல்லூரி பேராசிரியராக உயர்ந்த பொன்முடி, முதன் முதலில் அரசியல் அவதாரம் எடுத்தது திமுகவின் இளைஞர் அணியில்.
திமுகவிலேயே சக்தி வாய்ந்த மாவட்ட செயலாளர்களில் ஒருவரான விழுப்புரம் செஞ்சி ராமச்சந்திரனின் அறிமுகமும் ஆசியும் பொன்முடிக்கு கிடைக்க, கிடுகிடுவென கட்சியில் ஏறுமுகம்.
எந்த அளவுக்கு என்றால், 1989 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்கப்பெறும் வகையில். ஆனால் முதன்முறை கிடைத்த எம்எல்ஏ பதவி, 1991ல் திமுக ஆட்சி கலைக்கப்படும்வரை என இரண்டு ஆண்டுகள் மட்டுமே வாய்த்தது.
91 சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக மாபெரும் வெற்றியைப் பெற்ற போது தோல்வியை சந்தித்தவர்கள் பொன்முடியும் ஒருவர்.
அடுத்த தேர்தலுக்குள் மு க ஸ்டாலின் உடன் நெருங்கிய நட்பு வட்டத்தில் ஐக்கியமாகிய பொன்முடிக்கு 96 சட்டமன்ற தேர்தல் வெற்றி, மிகப் பெரிய திருப்புமுனை.
திமுக ஆட்சி அமைத்த போது மூத்தவர்களே எதிர்பார்க்காத வகையில் பொன்முடியை அமைச்சராக்கினார் கலைஞர்.
இதன் பிறகு பிறகு பொன்முடியின் பொருளாதார வளர்ச்சி நினைத்தே பார்க்க முடியாதது என்று சொல்வார்கள் விழுப்புரம் மாவட்டவாசிகள்.
விழுப்புரத்தைச் சுற்றி திரும்பிய திக்கெல்லாம் பொன்முடியின் சமஸ்தானங்கள், கல்வி நிறுவனங்கள் என்ற பேச்சுக்கு பஞ்சமே கிடையாது.
இதன் பலனாய் வருவாய் க்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு மற்றும் நில அபகரிப்பு வழக்கில் பொன்முடி சிக்கினார். ஆனால் இரண்டிலும் இருந்தும் சிறிது காலத்திலேயே மீண்டு விட்டார்.
மீண்டும் 2011ல் ஆட்சிக்கு வந்த போது லஞ்ச ஒழிப்புத்துறை, பொன்முடிக்கு எதிராக வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கை தொடர்ந்தது. மனைவியும் வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.
இந்த வழக்கிலும் விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தால் கடந்த 2016ஆண்டு பொன்முடி விடுதலை செய்யப்பட்டார். ஆனால் வழக்கு நடந்த விதமும் தீர்ப்பு வெளியான வேகமும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தின.
சில மாதங்களுக்கு முன்பு பொன்முடி மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தன்னிச்சையாக எடுத்து விசாரிக்க ஆரம்பித்தது.
ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்பில் ஏகப்பட்ட கோளாறுகள் உள்ளதாக குறிப்பிட்டு உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த நடவடிக்கையை மேற்கொண்டார்.
அவர் விசாரித்த வந்த நிலையில் மாற்றப்பட்டு நீதிபதி ஜெயச்சந்திரன் அந்த இடத்திற்கு வந்து வழக்கை தொடர்ந்து விசாரித்து நேற்று தீர்ப்பு அளித்தார்.
பொன்முடி கிழமை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டது செல்லாது என்றும் அவர் குற்றவாளி என்றும் நீதிபதி தீர்க்களிக்க ஒட்டு மொத்த தமிழகமும் அதிர்ந்து போனது.
ஊழல் தடுப்பு வழக்கு என்பதால், குற்றவாளி என தீர்ப்பு வெளியான அடுத்த வினாடியே எம்எல்ஏ பதவியும் அமைச்சர் பதவியும் காலாவதியாகி விட்டன என்ற சொன்னார்கள் சட்ட வல்லுநர்கள்.
சொத்துக்குவிப்பு வழக்கும் நில அபகரிப்பு வழக்கும் முதல் முறையாக துரத்தியபோது தப்பித்த பொன்முடியால், சட்டத்தின் பிடியிலிருந்து கடைசியில் தப்ப முடியவில்லை.
பொன்முடியின் இந்த திடீர் வீழ்ச்சி தமிழக அரசியலிலும் வட மாவட்டங்களிலும் எப்படி பார்க்கப்படும் என்பது தான் இனி முக்கியமான விஷயம்.
பொன்முடியை பொருத்தவரை துடுக்குத்தனமாக பேசி கட்சிக்காரர்களிடமும் பொதுமக்களிடமும் அவப்பெயரை அடிக்கடி சம்பாதித்துக் கொள்பவர்.
திமுகவில் உள்ள வன்னிய தலைவர்களை திட்டமிட்டு ஓரங்கட்டி ஒழிக்கிறார் என்ற குற்றச்சாட்டுக்கும் அளவே கிடையாது.
இதனால் எப்போதுமே அந்தப் பகுதி திமுகவினர் மத்தியிலும் பொன்முடிக்கு பலத்தை எதிர்ப்பு உண்டு. அனைத்துக் கட்சி சார்ந்த வன்னியர் சமூகத்து மக்களிடமும் பொன்முடி மீது தீராத கோபம் உண்டு.
அதிலும் பாமகவை பொறுத்தவரை பரம எதிரி. விழுப்புரம் அருகே ஒரு திரௌபதி அம்மன் கோயில் பூட்டப்பட்ட விவகாரத்தில் தங்களுக்கு எதிரான நிலைப்பாடு எடுத்தவர் பொன்முடி என்ற கோபம் வன்னிய சமூகத்துக்கு.
தன் பகுதியிலேயே இப்படி இரண்டு விதமான கோபத்துக்கு ஆளாகி இருக்கிறார்.
பொன்முடி விவகாரம் தமிழக அரசியலில் எந்த அளவுக்கு எதிரொலிக்கும் என்றால் பெரிதாக எதிர்வினை இருக்காது என்றே சொல்லலாம்.
ஊழலைப் பொறுத்தவரை தமிழக மக்கள் என்றைக்குமே பொருட்டதாக எடுத்துக் கொண்டதே இல்லை.
ஊழல் வழக்கில் நான்காண்டு சிறை தண்டனை 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்ட ஜெயலலிதாவுக்கே மீண்டும் ஆட்சியை வழங்கியவர்கள் தமிழக மக்கள்.
அதிமுக அமைச்சர்களும் ஊழல் மற்றும் வருவாய்க்கு அதிகமாக சொத்து குவிப்பில் சளைத்தவர்கள் அல்ல என்பதால் அந்த கட்சியும் பொன்முடி விவகாரத்தை பெரிதாக எடுத்து கையாள முடியாது.
ஊழல் குற்றவாளி பொன்முடி என்று திமுகவில் மீது லேபிள் ஒட்டி அதனை பாஜக வேண்டுமானால் தேசிய அளவில் இந்தியா கூட்டணிக்கு எதிராக பிரச்சாரத்தை மேற்கொள்ளலாம்.
பொன்முடியும் கட்சி செல்வாக்கும் அவர் மகன் கள்ளக்குறிச்சி திமுக எம்பி கௌதம் சிகாமணியின் எதிர்காலமும் எப்படி இருக்கும் என்பதை நாளை பொன்முடிக்கும் அவரது மனைவிக்கும் உயர் நீதிமன்றம் அறிவிக்கும் தண்டனையை பொறுத்தே உள்ளது