சென்னை: செங்கல்பட்டில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது என்ற ரிக்டர் அளவில் 3.2 என பதிவாகி உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில், இன்று (டிச.8) காலை 7.39 மணிக்கு 3.2 என்ற ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்து உள்ளது. இந்த லேசான நிலநடுக்கம் 79.85 நீளத்தில், 10 கிலோ மீட்டர் ஆழத்தில் பதிவானதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் தாக்கம், ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான, விண்ணமங்கலம், பெரியாங்குப்பம், சான்றோர்குப்பம், கரும்பூர், ஆலங்குப்பம், பாலூர் மற்றும் பல்வேறு கிராமப் பகுதிகளில் உணரப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல், வாணியம்பாடியைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இன்று காலை 7.35 மற்றும் 7.42 என இரண்டு முறை நில அதிர்வு உணரப்பட்டதால், பொதுமக்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்த நில அதிர்வு குறித்து தேசிய நிலநடுக்கவியல் மையத்திலிருந்து 3.2 ரிக்டர் அளவில் தமிழகத்தில் பல இடங்களில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அதேபோல், கர்நாடகாவின் விஜயபுரா மாவட்டத்திலும், இன்று காலை 6.52 மணிக்கு 3.1 என்ற ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலநடுக்கம், 75.87 நீளத்தில், 10 கிலோ மீட்டர் ஆழத்தில் உணரப்பட்டதாக தெரிய வந்துள்ளது.