சென்னை: சென்னையில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளம் பாதிப்பு குறித்து ஆய்வு செய்த மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தலைமைச் செயலகத்தில், இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிடம், க்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும், மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு (ம) நிவாரணப் பணிகள் குறித்தும், முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்துரைத்தார். தொடர்ந்து, ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை தெரிவித்து, இடைக்கால நிதியுதவி கோரும் கோரிக்கை மனுவினை (Memorandum)ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சரிடம் முதலமைச்சர் வழங்கினார்.
‘மிக்ஜாம்’ புயல் காரணமாக பெய்த வரலாறு காணாத பெருமழையின் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களும் பெரிய அளவில் பாதிப்பை சந்தித்துள்ளன. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில், வெள்ள பாதிப்புகளை பார்வையிட மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று காலை சென்னை வந்தார். அவருடன் மத்திய இணையமைச்சர் எல்.முருகனும் சேர்ந்து ஹெலிகாப்டர் மூலம் வெள்ளப்பாதிப்புகளை ஆய்வு செய்தனர் இந்த ஆய்வின்போது தமிழக அரசு சார்பில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு உடன் இருந்தனர்.
இதைத்தொடர்ந்து, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், எல்.முருகனும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை தலைமைச்செயலகத்தில் சந்தித்து மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் வெள்ளச் சேதங்கள் பற்றி கேட்டறிந்தனர். இந்த ஆய்வு கூட்டத்தில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அமைச்சர் தங்கம் தென்னரசு, அமைச்சர்.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.