ஐதராபாத்: தெலுங்கானா மாநில முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி பதவியேற்றுக் கொண்டார். ஐதராபாத்தில் நடைபெற்ற விழாவில் தெலுங்கானா முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி பதவி ஏற்றார். ரேவந்த் ரெட்டிக்கு ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு பிரதமர் மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பிஆர்எஸ் கட்சியும், ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சியும் கடுமையாக மோதியது. இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், பேரவைத் தோ்தலில் வெற்றிபெற்றால் தெலங்கானா அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொள்ளும் திட்டம் அமல்படுத்தப்படும், ரூ.2 லட்சம் வரை விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும், விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின் கீழ், ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.15,000, விவசாயத் தொழிலாளா்களுக்கு ஏக்கருக்கு ரூ.12,000 வழங்கப்படும் என வாக்குறுதிகளை அளித்தது.
இதைத்தொடர்ந்து, நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் இரண்டு முறை ஆட்சி செய்த பிஆர்எஸ் கட்சி தோல்வி அடைந்த நிலையில், காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து அக்கட்சியின் சட்டப்பேரவைத் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்ட ரேவந்த் ரெட்டி, மாநில முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். இன்று தெலங்கானா மாநில தலைநகா் ஹைதராபாத்தில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில், ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். தெலங்கானா துணை முதல்வராக மல்லு பாட்டி விக்ரமார்கா பதவியேற்றுக்கொண்டார். ரேவந்த் ரெட்டியுடன் 11 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.
இதன் மூலம் தெலங்கானாவின் முதல் காங்கிரஸ் முதல்வர் என்ற பெருமையை ரேவந்த் ரெட்டி பெற்றுள்ளார். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, முன்னாள் தலைவா்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தெலுங்கானா முதல்வராக பதவி ஏற்றுக்கொண்ட ரேவந்த் ரெட்டிக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட பல்வேறு மாநில அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
தெலங்கானா முதல்வராக பதவியேற்றுள்ள ரேவந்த் ரெட்டிக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் மக்களின் நலனுக்காக என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் தருவேன் எனத் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “தெலங்கானா முதல்வராக பதவியேற்கவுள்ள ரேவந்த் ரெட்டிக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். அவரது பதவிக்காலம் வெற்றிகரமாக அமைந்து நல்ல தாக்கத்தை ஏற்படுத்திட வாழ்த்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.