சென்னை
மிக்ஜம் புயல் பாதிப்பில் இருந்து சென்னை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புகிறது என அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
நேற்று மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சின்னமலை, தாடண்டர் நகர், ஐந்து விளக்கு ஆலந்தூர் சாலை, அப்பாவு நகர், ஜோதியம்மாள் நகர் ஆகிய பகுதிகளில் மிக்ஜம் புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உணவு, ரொட்டி, பால், மருத்துவ வசதி ஆகியவற்றை வழங்கியதோடு, நிவாரண பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம்,
”வேறு எந்த மழையைக் காட்டிலும் சென்னையில் வடகிழக்கு பருவமழை என்பது மிக கனமழையாக இருக்கின்றது. தற்போது இதுவரை இல்லாத அளவு வடகிழக்கு பருவமழையின் அளவு 29 சதவீதம் கூடுதலாகப் பெய்திருக்கிறது. தமிழகத்தில் இதுவரை வந்துள்ள புயல்களில் அதிக.அளவிலான பாதிப்பினை ஏற்படுத்திய புயலும் இது தான்.
வழக்கமாக மழை நீரைக் கடல் உள்வாங்கிவிடும். தற்போது 10 முதல் 20 சதவீதம் மழைநீரே உள்வாங்கப்பட்டதால் சென்னையின் பெருவாரியான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. மழை நீர் தற்போது 60 % வடிந்து சென்னை மாநகரம் இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது. பல இடங்களில் மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே கடந்த 2015-ம் ஆண்டு பெய்த மழையின் அளவைவிட தற்போது 2 மடங்கு மழை பெய்து இருக்கிறது. முதல்வர் மழை நீர் வடிகால்களைக் கட்டிருப்பதால் மிகப் பிரதான சாலைகளில் மழைநீர் வடிந்து, போக்குவரத்து சீராகிக் கொண்டிருக்கிறது.
மேலும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 40 ஏரிகளில் உள்ள உபரி நீர் அந்தப் பகுதிகளில் சூழ்ந்து இருக்கிறது. இன்னும் 20 மணி நேரத்தில் அனைத்து மழைநீரும் வடிந்து சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பிவிடும்.”
என்று தெரிவித்துள்ளார்.