மதுரை: மதுரை பகுதி அமலாக்கத்துறை அதிகாரி லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் சில அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை முடிவு செய்துள்ளது.
தமிழ்நாட்டில் மத்திய வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, என்ஐஏ என பல்வேறு துறை அதிகாரிகள் அதிரடி சோதனைகள் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தி வந்தனர். பல அமைச்சர்களும் அமலாக்கத்துறை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அமலாக்கத்துறையினரின் அடுத்தடுத்த சோதனைகள் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வந்தது.
இந்த நிலையில், அமலாக்கத்துறையின் மதுரை துணை மண்டல அமலாக்கத்துறை அதிகாரி மனோஜ் திவாரி என்பவர் லஞ்சம் வாங்கியபோது கைது செய்யப்பட்ட விவகாரம், மத்தியஅரசையே கதிகலங்க வைத்துள்ளது. அவரது வீடு, அலுவலகம் உள்பட பல இடங்களில் சுமார் 13மணி நேரம் லஞ்ச ஒழிப்பு காவல்துறை சோதனை நடத்திய நிலையில், சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திலும் சோதனை நடத்தப்போவதாக தகவல்கள் பரவின. இதனால் சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு மத்திய காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், மனோஜ் திவாரியிடம் நடத்தப்பட்ட சோதனை மற்றும் விசாரணையில் கிடைத்த தகவலின்படி, அவர் லஞ்ச பணத்தை பலருக்கு பகிர்ந்து கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, மற்ற சில அதிகாரிகளை அழைத்து விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு காவல்துறை முடிவு செய்து, அவர்களுக்கு சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளது. மேலும் மனோஜ் திவாரியை காவலில் எடுத்து விசாரணை நடத்தவும் லஞ்ச ஒழிப்பு துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளத.
மதுரை துணை மண்டல அமலாக்கத்துறை அலுவலகத்தில் அலுவலராகப் (Enforcement Officer) பணி புரிந்துவந்த அங்கித் திவாரி (Ankit Tiwari) என்பவர் கடந்த 29.10.2023 அன்று திண்டுக்கல்லைச் சேர்ந்த அரசு மருத்துவரான சுரேஷ்பாபுவை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது மருத்துவர் சுரேஷ்பாபு மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் மருத்துவர் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினரால் பதிவு செய்யப்பட்டு வழக்கு முடித்துவைக்கப்பட்டது. இந்நிலையில் முடித்துவைக்கப்பட்ட வழக்கை சுட்டிக்காட்டி, அவ்வழக்கில் அமலாக்கதுறை விசாரணை நடத்த வேண்டுமென பிரதமர் அலுவலகத்திலிருந்து உத்தரவு வந்துள்ளதாகவும் 30.10.2023 அன்று மதுரை அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு விசாரணைக்கு வரவேண்டும் என்றும் மருத்துவர் சுரேஷ்பாபுவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் அங்கிட் திவாரி கூறியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து அரசு மருத்துவர் மதுரைக்குச் சென்றபோது அங்கித் திவாரி மருத்துவர் சுரேஷ்பாபுவின் காரிலேயே ஏறிக்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் இருக்க வேண்டும் என்றால் 3 கோடி தரவேண்டும் என்றும், பின்னர் தனது உயரதிகாரிகளோடு பேசுவதாகத் தெரிவித்துவிட்டு இறுதியாக ரூ.51 லட்சம் தரவேண்டும் என்றும் பேரம் பேசியுள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் 1 ஆம் தேதி அரசு மருத்துவர் முதல் தவணையாக ரூ.20 லட்சம் பணத்தை அவரிடம் வழங்கியுள்ளார். பின்னர் மேல் அதிகாரிகளுக்கும் பங்குதர வேண்டி உள்ளதால் பேசியபடி முழுத்தொகையான 51 லட்சத்தையும் தரவேண்டும் என்றும் இல்லையென்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் தொடர்ந்து வாட்ஸ்அப் மூலமும், குறுஞ்செய்திகள் மூலமும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இவரது நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த அரசு மருத்துவர் சுரேஷ்பாபு கடந்த நவம்பர் 30-ம்தேதி அன்று திண்டுக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் அளித்தார்.
முதற்கட்ட விசாரணையில் அங்கித் திவாரி அமலாக்கத் துறை அதிகாரி என்றும், தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி அரசு ஊழியரை மிரட்டி பணம் வசூலித்துள்ளார் என்றும் தெரியவந்ததால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, இரண்டாவது தவணையாக நேற்று காலை திண்டுக்கல்லில் வைத்து 20 லட்சம் லஞ்சப்பணத்தைப் பெற்றுக்கொண்டபோது அவரை கையும், களவுமாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மதுரையில் உள்ள அங்கித் திவாரியின் வீட்டில் சோதனை நடத்தியதை தொடர்ந்து மதுரை தபால்தந்தி நகர் பகுதியில் உள்ள அமலாக்கத்துறை துணை மண்டல அலுவலகத்தில் நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கிய நிலையில் விடிய விடிய சோதனை நடத்தப்பட்டது. அப்போது பாதுகாப்பிற்காக 100க்கும் மேற்பட்ட காவல்துறையினரும், 50க்கும் மேற்பட்ட இந்தோ திபெத் எல்கை பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கைது செய்யப்பட்ட விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை 13 மணி நேரம் சோதனை நடத்திய நிலையில் சில அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப லஞ்ச ஒழிப்புத்துறையினர் திட்டம் என தகவல் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி, பிரதமர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு வந்திருப்பதாக கூறி அரசு ஊழியரை மிரட்டி பணம் பறிக்க முயற்சி செய்துள்ளதும், இதுபோன்று பலரை மிரட்டி லஞ்சம் பெற்று சக அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு பிரித்துக் கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது
மேலும், அவரது இடங்களில் நடைபெற்ற சோதனைகளில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கி இருப்பதாகவும், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவருடன், மதுரை மற்றும் சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள் பலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. மேலும, அங்கித் திவாரி இது போன்று பல நபர்களை மிரட்டி, கோடிக்கணக்கில் பணம் வசூலித்து சக அதிகாரிகளுக்கு பங்கு பிரித்து கொடுத்துள்ளார் என்றும் லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.