சென்னை: தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து, நாளை மிக்ஜாம் புயலாக மாறும் நிலையில், தமிழ்நாட்டில் உள்ள 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கியது. அப்போது முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. நவம்பர் மாதம் முதல் பருவ மழை தீவிரமடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்தார். கடந்த வாரம் முதல் தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குற்றிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் கடந்த நவம்பர் 29ந்தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய நிலையில், தற்போது (டிசம்பர் 1) வலுப்பெற்றுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெற கூடும் எனவும், அதற்கு மியான்மர் நாடு பரிந்துரை செய்த ‘மிக்ஜாம்’ என்ற பெயர் சூட்டப்படும் என வானிலை மையம் தெரிவித்து உள்ளத.
இந்த மிக்ஜாம் புயல், டிசம்பர் 4 ஆம் தேதி மாலை கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளதாகவும் இது சென்னை ஆந்திராக்கு இடையே கரையை கடக்கும் என்பதால், சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக, இன்று (01.12.202) தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
மேலும், மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம். மேலும் கடலோர பகுதிகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று மீன்வளத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம், கோகிலமேடு, புதுப்பட்டினம் மீனவர் குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. தற்போது கலப்பாக்கத்தில் உள்ள கடலின் சீற்றம் 5அடி முதல் 6அடிக்கு எழுவதால் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் உருவானதைத்தொடர்ந்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிகளில் உள்ள துறைமுகங்களில் 1ம்என் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்பட்டுள்ளது. அதாவது, பாம்பன், தூத்துக்குடி, எண்ணூர், சென்னை, கடலூர், நாகை, காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.