ஐதராபாத்: தெலுங்கானா சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சி தலைவர்கள், மத்திய மாநில அமைச்சர்கள், திரையுலக பிரபலங்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
தெலங்கானா மாநிலத்தில் உள்ள 119 சட்டப்பேரவை தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சில இடங்களில் வாக்கு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால் வாக்குப்பதிவு தாமதமானது. மாநிலம் முழுவதும் வாக்குப்பதிவுக்காக 35,655 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில், , 2,290 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதற்காக மொத்தம் 35,655 வாக்கு சாவடிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணிகளில் 75 ஆயிரம் போலீஸாரும், 375 கம்பனி துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 4 ஆயிரம் பதற்றமான வாக்குசாவடிகள் கண்டறியப்பட்டுள்ளதால், அங்கு கூடுதல் ராணுவப்படை மற்றும் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
இந்த தேர்தலில் மொத்தம் 3 கோடியே, 26 லட்சத்து, 18 ஆயிரத்து, 205 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்களர்களே சற்று அதிகமாக உள்ளனர். அதாவது, ஆண் வாக்காளர்கள் 1,62,98,418 பேரும், பெண் வாக்காளர்கள் 1,63,01,705 பேரும் உள்ளனர். 3-வது பாலினத்தின வாக்காளர்கள் 2,676 பேர் வாக்களிக்க உள்ளனர். இதில் 18 முதல் 19 வயது வரை உள்ள புதிய வாக்காளர்கள் 9,99,667 பேர் இம்முறை முதன் முறையாக வாக்களிக்க உள்ளனர்.
தேர்தல் பணிக்கு மொத்தம் 3.75 லட்சம் அரசு ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நேற்று அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இருந்து வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பாக வழங்கப்பட்டு, அந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
தெலுங்கானா தேர்தலில் மும்முனை போட்டி நிலவி வருகிறது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவுகள் தொடங்கின. அதற்கு முன்னதாக அனைத்து வாக்கு சாவடிகளிலும் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. அதை தொடர்ந்து சரியாக 7மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. பலர் ஆர்வமாக வாக்களிக்க அதிகாலையிலேயே வாக்குச்சாவடிக்கு வருகை தந்தனர்.
காலை 7 மணிக்கு முன்னரே பலர் நீண்ட வரிசைகளில் தங்களின் வாக்குகளை பதிவு செய்ய காத்திருந்தனர். மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டி, பிஆர்எஸ் எம்எல்சி கவிதா, நடிகர் சிரஞ்சீவி மற்றும் அவரது குடும்பத்தினர், ஜூனியர் என்டிஆர் என அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக பிரமுகர்கள் குடும்பத்துடன் வரிசையில் வந்து தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.
சபரிமலைக்கு மாலை அணிந்துள்ள நிலையில், நடிகர் சிரஞ்சீவி ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் தனது குடும்பத்தாருடன் வரிசையில் நின்று வாக்களித்தார். இதேபோன்று இங்கு ஜூனியர் என்.டி.ஆர், அல்லு அர்ஜுன், மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டி, எம்.எல்.சி கவிதா உள்ளிட்டோர் வாக்களித்தனர். தெலுங்கானா மாநிலத்தில், ‘ஹோம் ஓட்டிங்’ எனும் புதிய முறையும் அமல் படுத்தப்பட உள்ளது. அதாவது 80 வயது நிரம்பிய மூத்த வாக்காளர்களின் வீடுகளுக்கே தேர்தல் அதிகாரிகள் சென்று வாக்குகளை சேகரிக்க உள்ளனர்.