சென்னை: சர்ச்சையில் சிக்கிய பாஜக மாநில முன்னாள் பொதுச்செயலாளர் கே.டி.ராகவனுக்கு பாஜகவில் மீண்டும் பதவி வழங்கப்பட்டுள்ளது. அவர் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
செங்கல்பட்டை சேர்ந்தவர் கே டி ராகவன். இவர் பாஜகவை சேர்ந்தவர். இவர் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். டிவி விவாதங்களில் இவர் பங்கேற்று வருகிறார். இவர் 1990 ஆம் ஆண்டு செங்கல்பட்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் கடந்த 2006ஆம் ஆண்டு காஞ்சிபுரம் சட்டசபை தேர்தலிலும் 2011 ஆம் ஆண்டு செங்கல்பட்டு மற்றும் 2016 ஆம் ஆண்டு கொளத்தூர் ஆகிய சட்டசபை தேர்தல்களில் போட்டியிட்டிருந்தார். இவர்மீது கடந்த 2021 ஆகஸ்டு மாதத்தில் பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. அதுதொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கே.டி.ராகவன், தனது பொதுச்செயலாளரர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, சில மாதங்களாக அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார்.
இந்த நிலையில், அவருக்கு மீணடும் கட்சியில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
2024 மக்களவைத் தோ்தலையொட்டி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழ்நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வரும் நிலையில், கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகிறார். இதன் ஒருபகுதியாக, தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் பாஜக சாா்பில் பொறுப்பாளா்கள் நியமனம் செய்துள்ளார்.
அதன்படி, மத்திய சென்னை, சிவகங்கை, ராமநாதபுரம் தொகுதிகளில் மட்டும் தலா இரு ஒருங்கிணைப்பாளா்கள், பிற தொகுதிகளில் தலா ஒரு இணை ஒருங்கிணைப்பாளா்களை நியமனம் செய்துள்ளார். அதன்படி, தென்சென்னையில் ஒருங்கிணைப்பாளராக கரு.நாகராஜன், இணை ஒருங்கிணைப்பாளராக கராத்தே தியாகராஜன், காஞ்சிபுரம் தொகுதியில் கே.டி.ராகவன், வேலூரில் காா்த்தியாயினி, கள்ளக்குறிச்சியில் ஏ.அஸ்வத்தாமன், கோவையில் ஜி.கே.எஸ். செல்வக்குமாா், இணை ஒருங்கிணைப்பாளராக ஜி.கே.நாகராஜ், சிதம்பரம் தொகுதியில் தடா பெரியசாமி, தூத்துக்குடியில் சசிகலா புஷ்பா, தென்காசியில் ஆனந்தன் அய்யாசாமி, திருநெல்வேலியில் நயினாா் நாகேந்திரன், கன்னியாகுமரியில் எம்.மீனாதேவ் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனா்.
இந்தப் பட்டியலை தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை வெளியிட்டுள்ளாா்.