கொல்கத்தா
மேற்கு வங்க எதிர்க்கட்சி தலைவரான சுவேந்து அதிகாரியை அம்மாநில சபாநாயகர் இடைநீக்கம் செய்துள்ளார்.
தற்போது மேற்கு வங்க மாநில சட்டசபையில் குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. கூட்டத்தொடரில் அரசியலமைப்பு நாள் குறித்து விவாதம் நேற்று நடந்தது. அப்போது “நாட்டின் அரசியலமைப்பு எவ்வாறு அச்சுறுத்தலுக்கு உள்ளானது” என்பதை பற்றி விவாதிக்க 169 விதியின் கீழ் ஒரு தீர்மானம் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
பாஜக சட்டமன்ற உறுப்பினர். சங்கர் கோஷ்,பாஜகவில் இருந்து விலகிய சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்யாமல் எப்படி தங்கள் பதவியை தக்கவைத்துக் கொள்கிறார்கள் எனக் கேள்வி எழுப்பினார். இந்த பேச்சைச் சட்டசபை பதிவுகளில் இருந்து நீக்குமாறு சபாநாயகர் பீமன் பானர்ஜி உத்தரவு பிறப்பித்தார்.
இதை எதிர்த்து சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி தலைமையில் பாஜக உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்குச் சென்று அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
திரிணாமுல் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர். தபாஸ் ரே, எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரியின் செயலுக்கு ஆட்சேபனை தெரிவித்து அவரை இடைநீக்கம் செய்யுமாறு கோரிக்கை வைத்தார். அதை ஏற்று சுவேந்து அதிகாரியை இடைநீக்கம் செய்த சபாநாயகர் பீமன் பானர்ஜி, குளிர்கால கூட்டத்தொடர் முழுவதிலும் அவர் பங்கேற்கத் தடைவிதித்தார்.