அருள்மிகு வீரமார்த்தாண்டேஸ்வரர் திருக்கோயில், அம்பாசமுத்திரம், திருநெல்வேலி மாவட்டம்.
முற்காலத்தில் இப்பகுதியை வீரமார்த்தாண்டன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான். சிவபக்தனான அம்மன்னன், சிவனுக்குத் தனிக்கோயில் கட்ட வேண்டுமென விரும்பினான். ஆனால் அவனால் எந்த இடத்தில் கோயில் கட்டுவதெனத் தெரியவில்லை. ஒருசமயம் அவரது கனவில் தோன்றிய சிவன், இத்தலத்தைச் சுட்டிக்காட்டி தனக்குக் கோயில் எழுப்பும்படி கூறினார். அதன்பின் மன்னன் இத்தலத்தில் சிவனுக்குக் கோயில் எழுப்பினான். சிவன் மன்னனின் பெயரால், “வீரமார்த்தாண்டேஸ்வரர்” என்று பெயர் பெற்றார்.
தாமிரபரணி நதியின் வடகரையில் அமைந்த கோயில் இது. சுவாமிக்கு இடப்புறத்தில் அம்பிகை தனிச்சன்னிதியில் இருக்கிறாள். இங்குச் சிவனும், அம்பிகையும் “சிவசக்தி சொரூபமாக” இருப்பதாக ஐதீகம். எனவே இருவரது சன்னதியையும் சேர்ந்து சுற்றி வரும்படியாகக் கோயில் அமைக்கப்பட்டிருக்கிறது. புதிதாகத் திருமணம் செய்து கொள்ளும் தம்பதியர், தங்களது இல்வாழ்க்கை சிறப்பாக இருக்கச் சிவன், அம்பாளுக்கு அபிஷேகம் செய்து வேண்டிக்கொள்கிறார்கள்.
பிரச்சினையால் பிரிந்திருக்கும் தம்பதியர், இங்கு வேண்டிக்கொள்ள அவர்களது வாழ்க்கை சிறக்கும் என்பது நம்பிக்கை. கார்த்திகை மாதம் உத்திரம் நட்சத்திரத்தன்று, திருக்கல்யாண விழா நடக்கிறது.
கால பைரவர் தனிச்சன்னிதியில் இருக்கிறார். இவருக்குத் தேய்பிறை அஷ்டமியில் சிறப்புப் பூஜைகள் நடக்கிறது. கடன் பிரச்சனை உள்ளவர்கள் இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள். பிரகாரத்தில் சூரியன், ஜூரதேவர், நால்வர், கன்னி விநாயகர், பாலசுப்பிரமணியர், சண்டிகேசுவரர், சனீஸ்வரர், நவக்கிரகம் மற்றும் சந்திரனுக்குச் சன்னதிகள் உள்ளது.
திருவிழா:
கார்த்திகையில் திருக்கல்யாணம், மார்கழி திருவாதிரை, நவராத்திரி.
கோரிக்கைகள்:
திருமணத்தடை நீங்க, புத்திரபாக்கியம் கிடைக்கச் சிவனிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.
கடன் பிரச்சனை உள்ளவர்கள் இங்குள்ள பைரவரை வேண்டிக்கொள்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திரு முழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்புப் பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.