சென்னை: ஆளுநர் தமிழ்நாட்டை விட்டு வெளியேறுவதை தவிர வேறு வழியில்லை என பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த தனி தீர்மானத்தின் மீது பேசிய தவாக தலைவர் வேல்முருகன் கூறினார்.

மாநில அரசின் உரிமையில் ஆளுநர் தலையிடுகிறார், தமிழகத்தில் நடக்கும் ஆட்சியை பார்த்து பொறாமைப்படு கிறார். நீதிமன்றம் கொட்டு வைத்தாலும் ஆளுநர் திருந்துவதில்லை என காங்கிரஸ் எம்எல்ஏ செல்வ பெருந்தகை விமர்சனம் செய்தார்.

பேரவையில் பேசிய கொங்கு ஈஸ்வரன், எய்தவர்கள் அமர்ந்து கொண்டு வேடிக்கை பார்க்கிறார்கள். அம்பு எய்தவர் கள் சொன்னதை விட கொஞ்சம் அதிகமாக குதிக்கிறது என்று ஆளுநரை மறைமுகமாக சாடினார். மேலும் அனைத்து அரசியல் கட்சிகளைச் சார்ந்த எம்எல்ஏக்களும் தங்களது கருத்தை பதிவு செய்தனர்.

 ஆளுநர் ஆர்என் ரவி திருப்பி அனுப்பிய 10 மசோதாக்கள் தொடர்பாக தமிழ்நாடு சட்டபேரவை சிறப்பு கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில், ஆளுநரின் நடவடிக்கையை கண்டித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்து பேசினார். அப்போது, ஆளுநர் பதவி தேவையில்லை என்று கடுமையாக சாடினார்.

இந்த தீர்மானத்தின்மீது விவாதம் நடைபெற்று வருகிறத. தீர்மானத்தின்மீது பேசிய  திமுக கூட்டணி கட்சியான  தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சியின் தலைவரும்,    எம்எல்ஏவுமான வேல்முருகன் , தமிழ்நாட்டில் உள்ள 7 கோடி மக்களின் நியாயமான அபிலாஷைகளை, கோரிக்கைகளின் அடிப்படையில் சட்டங்களை இம்மாமன்றம் இயற்றுகிறது.

இந்த சட்டங்களை இயற்றி தமிழ்நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தின் தலைவராக இருக்கும் ஆளுநருக்கு அனுப்பி வைக்கிறோம். ஆளுநர் அதற்கு உடனடியாக கையெழுத்திட்டு தமிழக அரசு சட்டம் கொண்டு வருவதை உறுதி செய்ய தான் அவர் இருக்கிறார். ஆனால் அவர் தனது கடமையை, பணியை, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி எடுத்து கொண்ட உறுதிமொழியை செய்யத்தவறும் பட்சத்தில் மீண்டும் அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கும் வகையில் இந்த பேரவை விதி 143 விதியின் கீழ் மறுஆய்வு செய்ய இங்கு கூடியிருக்கிறோம்.  இந்திய அரசியலமைப்பு சட்டம் உட்பிரிவு 200ன் கீழ் சட்டங்களை இயற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்ப உள்ளோம். இப்படி அனுப்பும் சட்டத்துக்கான முன்வடிவை  வாசித்த முதலமைச்சர், மசோதக்களுக்கு ஒப்புதல் அளிப்பது ஆளுநரின் கடமை என்று கூறி  வரிசையாக தீர்மானங்களை முன்மொழிந்துவிட்டு அமர்ந்தார். பின்னர் உறுப்பினர்கள் எழுந்து பேசினர்.

சபாநாயகர்:

இதைத்தொடர்து பேசிய சபாநாயகர் அப்பாவு,  முதல்வர் அவர்கள், ஆளுநர் திருப்பி அனுப்பப்பட்ட தீர்மானங்களை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று தனித்தீர்மானம் கொண்டு வந்திருக்கிறார். அதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. உறுப்பினர்கள் ஒவ்வொருவராக தங்கள் கருத்துக்களை பேச வேண்டும். பேச முன்வருகின்ற சட்டமன்ற உறுப்பினர்கள் நம்முடைய சட்டமன்ற மரபு, மாண்பு, இறையான்மையை பாதுகாத்திட வேண்டும்.

இந்திய குடியரசுத் தலைவர் பற்றியோ, இந்திய நாட்டில் உள்ள நீதிமன்றங்களை பற்றியோ அல்லது மாண்புமிகு ஆளுநர்கள் பற்றியோ எந்த விதமாக கருத்துக்களையும் சொல்ல வேண்டியதில்லை.. அதற்கான அனுமதி உங்களுக்கு மறுக்கப்படுகிறது.  ஏற்கனவே உங்களுக்கு இது தெரிந்த ஒன்று தான்.. ஆகவே நம்முடைய முதல்வர் அவர்கள் கொண்டு வந்த தீர்மானத்தின் அடிப்படையில் மட்டும் கருத்துக்களை தெரிவிக்கலாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

செல்வ பெருந்தகை:

காங்கிரஸ் கட்டமன்ற கட்சி தலைவர் செல்வபெருந்ததை எம்எல்ஏ பேசும்போது, நீதிமன்றம் கொட்டு வைத்தாலும் ஆளுநர் திருந்துவதில்லை என்று குற்றம் சாட்டியதுடன்,  மாநில அரசின் உரிமையில் ஆளுநர் தலையிடுகிறார், தமிழகத்தில் நடக்கும் ஆட்சியை பார்த்து பொறாமைப்படுகிறார். நீதிமன்றம் கொட்டு வைத்தாலும் ஆளுநர் திருந்து வதில்லை என விமர்சனம் செய்தார்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்களே இன்னும் 10 நிமிடத்தில் சூரசம்ஹாரம் திருச்செந்தூரில் நடைபெற இருக்கிறது. எதற்காக இந்த சூரசம்ஹாரம் இந்த தமிழ்நாட்டில் நடக்கிறது. தமிழ் முருகர் கடவுள் தமிழ்நாட்டிற்கு படையெடுப்புகள் தமிழ்நாட்டையும் தமிழ் மக்களையும் அழிக்க வரும் போது முருக பெருமான் விழித்தெழுந்து சூரசம்ஹாரம் செய்த நாள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.  இந்த நாளில் முதல்வர் மு.க ஸ்டாலின், தமிழ்நாட்டிற்கு மட்டும் இன்றி இந்தியாவுக்கே வழிகாட்டும் தீர்மானத்தை கொண்டு வந்ததற்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களை யும் தெரிவித்துக்கொள்கிறோம். அப்படிப்பபட்ட தீர்மானத்தை கொண்டு வந்த சூரரை போற்றுகிறோம். பல முன்னுதாரணங்களை எம்.எல்.ஏக்கள் இந்த அவையில் எடுத்து வைத்தார்கள்.

ஆட்சியில் இருந்தால் ஒரு நிலைப்பாடு. ஆட்சியில் இல்லை என்றால் ஒரு நிலைப்பாட்டை ஒரு தேசியக் கட்சி எடுத்து வந்துள்ளது. முதல்வர் எதிர்க்கட்சியாக இருந்த போது என்ன நிலைப்பாடோ அதை ஆளும் கட்சியாக இருக்கும் போதே முன்னெடுத்து செல்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் பேரவையில் பேசினேன்.

நமது முதல்வர் நாகலாந்து முதல்வர் அல்ல.. தமிழ்நாட்டின் முதல்வர்.. அவரை தொட்டால் ஷாக் அடிக்கும் என்று சொன்னது இன்று வரை அவைக்குறிப்பில் உள்ளது. ஆகவே உச்ச நீதிமன்றத்தை நாடி தமிழ்நாட்டு மக்களை பாதுகாக்கும் வேலையில் முனைப்பாக செயல்பாட்டில் ஈடுபட்டு உள்ளார். ஆளுநரை பற்றி விமர்சிக்க வேண்டும் என்ற விருப்பம் இல்லை. பெருந்தன்மையை முதல்வரிடம் பார்க்கிறோம்.

ஒரு ஆளுநர் எதையும் பொருட்படுத்தாமல் எதோ முடியாட்சி நடப்பதை போல தொடந்து மாநில அரசுக்கு எதிராக செயல்பட்டு கொண்டு இருக்கிறார். மிகப்பெரிய அதிர்ச்சி என்னவென்றால் அவர் விளையாட்டு வேண்டும் என்றாலும் விளையாடட்டும்.. நாளை நமது இந்திய அணி வெற்றி பெறுவதை போல நமது முதல்வர் வெற்றி பெற போகிறார் என்றார்.

வேல்முருகன்:

முதல்வர் தீர்மானத்தை தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் வரவேற்கிறேன். இந்த 10 மசோதாவை ஆய்வு செய்து நிறைவேற்றப்பட வேண்டும். இந்த மசோதாக்களை திருப்பி அனுப்பிய ஆளுநருக்கு எமது கட்சியின் சார்பிலும் மக்களின் சார்பிலும், ஜனநாயக மக்களின் சார்பிலும், இந்திய அரசியலமைப்பு சட்டங்களை ஏற்றுக்கொண்டு நடக்கும் மக்களின் சார்பிலும் கடும் கண்டனத்தை பதிவு செய்து கொள்கிறேன்.

உச்சநீதிமன்றம் இதில் தலையீட்டு தமிழக முதல்வர், பஞ்சாப் அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதியரசர் மிகச்சரியாக ஆளுநர் என்று சொல்லக்கூடியவர்களை சுட்டியும், குட்டியும் காட்டி உள்ளனர்.  முதல்வர் சொன்னது போல் அவர்களை கொட்டு வைத்தாலும் ஏற்கிற மனம் போல் ஏதோ ஒரு சித்தாந்தம், சிந்தனையின் அடிப்படையில் ஆளுநராக பொறுப்பேற்று கொண்டு தொடர்ச்சியாக அவரது நடவடிக்கை என்பது ஜனநாயக மாண்புகளுக்கு எதிராக உள்ளது.

7 கோடி மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு மற்றும் எதிர்க்கட்சிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்ட முன்வடிவுகளை அவர் குப்பையில் போடுவது போல் அமைதி காக்கிறார். நான் காத்திருப்பு பட்டியலில் வைத்திருந்தால் அது காலாவதியானது போலாகும் என பேசுகிறார். தமிழ்நாட்டு லட்சினை தூக்கி ஏறிகிறார். தமிழ்நாடு என்ற பெயரை தூக்கி எறிகிறார். தமிழ்நாடு தந்தை பெரியார், அண்ணா, கருணாநிதி என்றால் கசக்கிறது. சமூக நீதி என்ற வரியை படிக்க மறுக்கிறார். உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டிய பிறகு அவர் திருப்பி அனுப்பி உள்ளார். முதல்வரால் கொண்டு வரப்பட்ட AD இந்த மசோதாக்கள் மக்களுக்கானது. மண்ணுக்கானது. குறிப்பாக கல்வி, ஆராய்ச்சி, மருத்துவமனை போன்ற சட்டங்களை எந்த காழ்ப்புணர்ச்சி அடிப்படையில் ஆளுநர் திருப்பி அனுப்புகிறார் என்பதை நாடே அறியும். இந்த 10 மசோதாவை மீண்டும் நிறைவேற்றி அனுப்புவதால் ஆளுநருக்கு ஒப்புதல் அளிப்பதை தவிர வேறு வழியில்லை. ஆளுநர் ஆர்என் ரவி தமிழ்நாட்டை விட்டு வெளியேறுவதை தவிர வேறு வழியில்லை’  என்றார்.

கொங்கு ஈஸ்வரன்:

தொடர்ந்து தீர்மானத்தின்மீது பேசிய கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் ஈஸ்வரன், முதல்வர் கொண்டு வந்து இருக்கும் தீர்மானத்தை கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பாக மனமாற வரவேற்கிறோம். ஏறக்குறைய 4 ஆண்டுகள் கழித்து ஆளுநர் அவர்கள் மசோதாக்களை காரணம் எதுவும் சொல்லாமல், திருப்பி அனுப்பியுள்ளார்.

தமிழ்நாடு அரசை உச்ச நீதிமன்றத்தை நாட வைத்து இருப்பது வருத்தத்திற்கு உரியது. நமது மாநிலத்தில் உள்ள ஆளுநருக்கு எதிராக நாம் உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டியுள்ளது. உச்ச நீதிமன்றம் பலமுறை சொல்லியிருக்கிறது. ஆளுநர் மக்களால் தேர்ந்து எடுக்கபட்டவர் அல்ல. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு கட்டுப்பட்டவர். அமைச்சரவை என்ன சொல்கிறதோ. அதை செய்ய வேண்டும் என்று பலமுறை சொல்லியும் கூட இதை மறுபடியும் மறுபடியும் செய்து கொண்டே இருக்கிறார்கள்.

எய்தவர்கள் அமர்ந்து கொண்டு வேடிக்கை பார்க்கிறார்கள். அம்பு எய்தவர்கள் சொன்னதை விட கொஞ்சம் அதிகமாக குதிக்கிறது. கண்டிப்பாக தற்போது பல மாநிலங்களில் ஆளுநரின் செயல்பாடுகள் டெல்லியில் இருக்கும் ஆட்சி மாற்றத்திற்கு வழிவகுக்கக் கூடியதாக இது அமைந்துவிடும் என்று மகக்ள் மத்தியில் இன்று பேசுகிறார்கள். என்றைக்காவது நம்முடைய ஆளுநர் அதிகாரிகளை அழைத்து வளர்ச்சி திட்டங்கள் குறித்து பேசியது உண்டா. என்னால் தமிழகத்திற்கு இந்த நல்லதை செய்து இருக்கிறேன். ஒன்றிய அரசில் இருந்து இதை கொண்டு வந்து இருக்கிறேன்.  தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளை முடக்கும் செயல்பாடுகளைத்தான் தொடர்ந்து செய்து கொண்டு இருக்கிறார். இது இன்றைக்குள்ள போராட்டம் இல்லை. 60 ஆண்டுகால போராட்டம் என கூறினார்.

ஜவாஹிருல்லா:

ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை ஆளுநர் மதிக்கவில்லை என்று பேரவையில் ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். முதல்வர் முன்மொழிந்த தனித்தீர்மானத்தை மனிதநேய மக்கள் கட்சி ஆதரிக்கிறது. அமைச்சரவையின் ஆலோசனைப்படிதான் ஆளுநர் செயல்பட வேண்டும் என்று அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது. ஆளுநர் பதவியை வைத்து தமிழகத்தில் அரசியல் செய்வது ஜனநாயகத்திற்கு விரோதமானது. சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க ஆளுநர் மறுத்தது சர்வாதிகாரத்தின் உச்சம் என்று ஜவாஹிருல்லா தெரிவித்தார்.

நாகை மாலை

பாஜக அரசியல்வாதியாக ஆளுநர் ரவி செயல்பட்டு வருகிறார் என்று சி.பி.எம். எம்எல்ஏ நாகை மாலி குற்றம் சாட்டினார்.  ஜனநாயக மாண்புகளை புறந்தள்ளிவிட்டு செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவி போல் எந்த மாநிலத்திலும் ஆளுநர் இல்லை. எந்தவித அதிகாரமும் இல்லாத ஒருவர் சகலவிதமான அதிகாரத்தையும் கையில் எடுப்பேன் என்பதை இனிமேலும் அனுமதிக்கக் கூடாது என்றார்.

சதன் திருமலைக்குமார்

நல்ல ஆலோசகர்களை வைத்துக் கொண்டு ஆளுநர் செயல்பட வேண்டும் என்று சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார். அமைச்சரவையின் முடிவை ஏற்று செயல்படத் தவறிய ஆளுநர் பதவி விலகிச் செல்ல வேண்டும் என்று  வலியுறுத்தியுள்ளார்.

சிந்தனை செல்வன்:

தமிழக அரசின் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு மனமில்லை என்று கூறிய சிந்தனைச் செல்வன் தமிழ்நாடு என்ற பெயரை கூட புறக்கணிக்கிறார் ஆளுநர். தேசம் பெற்ற சுதந்திரத்தை இழந்து விடுவோமோ என்ற 1949-ல் அம்பேத்கர் பேசியதை முதல்வரின் பேச்சு நினைவூட்டியது. 10 மசோதாக்களையும் திருப்பி அனுப்பும் தனித் தீர்மானத்தக்கு வி.சி.க ஆதரவு தெரிவிக்கிறது. அரசியல் அமைப்பு சாசனத்துக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதை முதலமைச்சர் தைரியமாக எதிர்கொள்கிறார். அம்பேத்கர், பெரியா, அண்ணா, கலைஞர், காமராஜா பெயரை உச்சரிக்க ஆளுநருக்கு மனமில்லை என பேசினார்.

தளி ராமச்சந்திரன்

ஆளுநர்கள் என்பவர்கள் ஆட்சியாளர்கள் அல்ல என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று தளி ராமச்சந்திரன் வலியுறுத்தினார்.  ஆளுநரை தங்கள் கருவியாக வைத்துக் கொண்டு ஒன்றிய அரசு, மாநில அரசுகளை முடக்கி வருகிறது. ஆளுநர் அலுவலகத்தை ஆர்.எஸ்.எஸ். அலுவலகமாக மாற்றி செயல்பட்டு வருகிறார். மாநில அரசுகளின் செயல்பாடுகளை முடக்கும் வகையில் செயல்படும் ஆளுநரை குடியரசுத் தலைவர் திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளார்.

மேலும் பலர் தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர்.