சென்னை
இன்று காலை 10 மணிக்குத் தமிழக சட்டசபை சிறப்புக் கூட்டம் நடைபெற உள்ளது.
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தமிழக அரசுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் மோதல் போக்கு நீடித்து வருகிறது. தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்துள்ளதற்குத் தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
ஆளுநர் பண மசோதா தவிர பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் அவற்றை அரசிடமே அவர் திருப்பி அனுப்பி வைக்கிறார். இது குறித்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் ஆளுநருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளது. சமீபத்தில் மனு மீது நடந்த விசாரணையின்போது, ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றம் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து, வழக்கின் அடுத்த விசாரணையை 20 ஆம் தேதிக்குத் தள்ளி வைத்தது.
தமிழக அரசு ஏற்கனவே சட்டசபையில் நிறைவேற்றி ஒப்புதலுக்காக அனுப்பி வைத்த 10 சட்ட மசோதாக்களை அரசிடமே 2 நாட்களுக்கு முன்பு ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். தமிழக அரசுக்கு இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே இந்த மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்க அரசு முடிவு செய்தது.
அதையொட்டி சட்டசபையை உடனடியாக கூட்டுவதாக அறிவிக்கப்பட்டது. சட்டசபையின் சிறப்புக் கூட்டம் 18 ஆம் தேதி (இன்று) காலை 10 மணிக்குக் கூடும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்ததன்படி இன்று சட்டசபையின் சிறப்புக் கூட்டம் நடைபெறவுள்ளது.
.ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களும் உயர் கல்வி சம்பந்தப்பட்ட மசோதாக்கள் ஆகும். இவற்றில் பெரும்பாலான மசோதாக்கள், பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனத்தை அரசே செய்யும் வகையிலான திருத்தத்தை மேற்கொள்வதாக உள்ளது. மருத்துவ பல்கலைக்கழகம், கால்நடை பல்கலைக்கழகம், வேளாண்மை பல்கலைக்கழகம், மீன்வள பல்கலைக்கழகம் ஆகியவையும் உள்ளன. அந்தந்த துறையின் அமைச்சர்கள் அந்த மசோதாக்களை அவையில் அறிமுகம் செய்ய உள்ளனர்.
அமைச்சர் பதிலளித்த பின்னர் அந்த மசோதாக்களை சட்டமன்ற உறுப்பினர்களின் குரல் வாக்கெடுப்பிற்குச் சபாநாயகர் விடுவார். குரல் வாக்கெடுப்பின் மூலம் அந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றும். தவிர, வேறு புதிய மசோதாக்கள், அரசினர் தீர்மானங்கள் தாக்கல் செய்யப்படலாம். அப்படித் தாக்கல் செய்யப்பட்டால், அதன் மீதும் கட்சிகள் சார்பில் விவாதங்கள் நடைபெறும். எனவே இந்த சட்டசபை சிறப்புக் கூட்டம் அரசியல் ரீதியாக மிகுந்த பரபரப்பை ஏற்படுத்துவதாக இருக்கும்.