அதானி நிறுவனம் நிலக்கரி இறக்குமதி மோசடியில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களைத் திரட்ட அனுமதி வழங்கவேண்டும் என்று இந்திய வருவாய் புலனாய்வு முகமை உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளதை அடுத்து அதானி மீதான விசாரணை மீண்டும் துவங்கவாய்ப்பு.
இந்தோனேசிய துறைமுகத்தில் ஏற்றுமதி செய்யப்பட்டபோது காட்டப்பட்ட நிலக்கரியின் மதிப்பை இந்திய துறைமுகத்திற்கு வந்து இறங்கும்போது அதன் மதிப்பை பலமடங்கு உயர்த்திக்காட்டி மோசடியில் ஈடுபடுவதாக அதானி நிறுவனம் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
துபாய், சிங்கப்பூர், தைப்பே (தைவான்) ஆகிய நாடுகளில் உள்ள பினாமி நிறுவனங்கள் மூலம் இந்த மோசடி நடைபெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள இந்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு பலமுறை முயற்சி செய்தபோதும் அதானி நிறுவனம் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டுவந்துள்ளது.
சிங்கப்பூரில் இயங்கிவரும் அதானி குளோபல் நிறுவனங்களின் கணக்குகளை ஆய்வு செய்ய வருவாய் புலனாய்வு பிரிவு மேற்கொண்ட முயற்சிகளுக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் மூலம் சட்டரீதியான தடைகளை அதானி நிறுவனம் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
2016ம் ஆண்டு முதல் அதானி நிறுவனத்தின் நிலக்கரி இறக்குமதி மோசடி குறித்து விசாரணை மேற்கொள்ள முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் அதானியின் இந்த தொடர் முட்டுக்கட்டை காரணமாக விசாரணை முடங்கி இருந்தது.
இந்த நிலையில், அதானி நிறுவனம் நிலக்கரி இறக்குமதி மோசடியில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களைத் திரட்ட அனுமதி வழங்கவேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வருவாய் புலனாய்வு முகமை புதிதாக மனு அளித்திருப்பதை அடுத்து நிலக்கரி மோசடி விவகாரம் மீண்டும் சூடு பிடித்துள்ளது.