சென்னை: தமிழ்நாட்டில் திமுக அரசு பதவி ஏற்றது முதல் பல்வேறு கட்டணங்களை அடுத்தடுத்து உயர்த்தி வந்த நிலையில், தற்போது, பொறியியல் படிப்புக்கான தேர்வு கட்டணத்தையும் 50 சதவிகிதம் உயர்த்தி உள்ளது.
2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்த திமுக, பெண்களுக்கு, மாணவிகளுக்கு இலவச அறிவிப்புகளை வெளியிட்டு வரவேற்பை பெற்ற நிலையில், அரசு வருமானத்துக்காக அனைத்து விதமான கட்டணங்களையும் அடுத்தடுத்து உயர்த்தி வருகிறது.
ஏற்கனவே சொத்து வரி, மின் கட்டணம், குடிநீர் வரி, பால் விலை உயர்வு, சொத்து பதிவு வரி உயர்வு என அடுத்தடுத்து பல்வேறு வரிகளை உயர்த்தி வந்த நிலையில், திருச்செந்தூரில் கோவில் தரிசன டிக்கெட்டு கட்டணத்தையும் பல மடங்கு உயர்த்தி உள்ளது. இந்த நிலையில், தற்போது கல்லூரி தேர்வு கட்டணத்தையும் 50 சதவிகிதம் உயர்த்தி உள்ளது.
அதன்படி, அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டணம் 50% உயர்த்தப்பட்டு உள்ளது. இது பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுவரை, அண்ணா பல்கலை. தேர்வு கட்டணமாக ஒரு தாளுக்கு ரூ.150 பெறப்பட்டு வந்தது. இதை தற்போது சுமார் 50 சதவிகிதம் அளவில் உயர்த்தி உள்ளது. அதன்படி, தேர்வு கட்டணமாக ஒரு தாளுக்கு ரூ.225ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
ஒரு மாணவர், ஒரு செமஸ்டருக்கு 9 தாள்கள் தேர்வு எழுத வேண்டி உள்ளதால் ரூ.2050 கட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், இறுதியாண்டு மாணவர்கள் புராஜெக்ட் செய்ய ரூ.600 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், அதை ரூ.900ஆக உயர்த்தி உள்ளது. இது மாணவர்களிடைய சலசலப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், 50% தேர்வுக்கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஏற்கனவே கடந்த 2019ம் ஆண்டு தேர்வு கட்டணத்தை 20 ஆண்டுகளுக்கு பிறகு அண்ணா பல்கலைக்கழகம் உயர்த்தி நிலையில், தற்போது மீண்டும் உயர்த்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.