சென்னை: தமிழ்நாட்டில் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் ஒரே வாரத்தில் 23 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில், காவல்துறை அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாகவும், ஆளும் திமுக அரசுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் பல்வேறு புகார்கள் உள்ள நிலையில், குற்ற வழக்குகளில் தொடர்புடைய பலர்மீது குண்டர் சட்டம் போடப்படுவதும் அதிகரித்து வருகிறது. இதில் பலர்மீதான குண்டர் சட்டங்களை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. குண்டர் சட்டத்தில், கைது செய்யப்பட்டதற்கான உரிய காரணத்தை உரிய காலத்திற்குள் காவல்துறையினர் தெரிவிக்காததால் குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக காவல்துறைக்கும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
இநத் நிலையில், கடந்த ஒரு வாரத்தில் 23 குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது சென்னை காவல்துறை.
பல்வேறு குற்றச்சம்பவங்கள் ஈடுபடக்கூடிய நபர்கள், 3க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ள நபர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவது வழக்கம். அதன்படி, திருட்டு, செயின் பறிப்பு, வழிப்பறி, பணமோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தொடர்புடைய 402 குற்றவாளிகள் இருக்கும் பட்சத்தில், ஒரு வாரத்தில் குறிப்பிட்ட அதிக குற்றங்கள் புரிந்த நபர்கள் மீது குண்டர் சட்டம் பதியப்பட்டுள்ளது. குறிப்பாக 23 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நவம்பர் 9 – நவம்பர் 15 வரை நடத்திய சோதனையின் அடிப்படையில் கைது செய்யப்பட்டர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் ஜனவரி 1 முதல் நவம்பர் 15 வரை பல்வேறு குற்ற வழக்குகளில் 588 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.