சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி சொந்த ஊருக்கு சென்றவர்கள் மீண்டும் பணியிடங்களுக்கு திரும்ப வழக்கமான பேருந்துகளுடன் 2100 சிறப்புபேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்து துறை தெரிவித்து உள்ளது.
தமிழகம் முழுவதும் நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, நகர்ப்புறங்களில் உள்ள வர்கள் தங்களது சொந்த ஊர் செல்லும் வகையில், பலர் சுற்றுலா தலங்களுக்கு செல்லும் வகையிலும், தமிழ்நாடு அரசு சார்பில், வழக்கமான பேருந்துகளுடன் பல ஆயிரம் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன.
தற்போது, தீபாவளி பண்டிகை முடிந்த நிலையில் மீண்டும் தங்களது ஊர்களுக்கு திரும்பும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை அறிவித்துள்ளது. இதனை பயன்படுத்தி பொதுமக்கள் எந்தவித சிக்கலுமின்றி திரும்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, இன்று (13-11-2023) திங்கள் அன்று தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் 2,100 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது.
அதாவது, பல்வேறு நகரங்களில் இருந்து சென்னைக்கு 975 பேருந்துகளும், சென்னையை தவிர்த்து இதர இடங்களுக்கு 1,395 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
நாளை (14-11-2023) செவ்வாய் அன்று பல்வேறு நகரங்களில் இருந்து சென்னைக்கு 917 பேருந்துகளும், சென்னையை தவிர்த்து இதர இடங்களுக்கு 1,180 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இவற்றில் முன்பதிவு பேருந்துகளும் அடங்கும். தீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவிற்கு tnstc official app மற்றும் www.tnstc.in போன்ற இணையதளங்கள் மூலமாகவும் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் வசதிக்காக 24 மணி நேர கட்டுப்பாட்டு அறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சிறப்பு பேருந்துகள் தொடர்பாக தகவல்கள் அறிந்து கொள்ள, புகார்கள் தெரிவிக்க 94450 14450, 94450 14436 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பேருந்து நிலையங்களுக்கு வருகை தரும் பயணிகள் பேருந்து மற்றும் வழித்தடம் தொடர்பான விவரங்கள் தெரிந்து கொள்ள பல்வேறு இடங்களில் தகவல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சென்னை திரும்பியதும் நகரின் பல்வேறு இடங்களுக்கு செல்லும் வகையில் கூடுதல் இணைப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே பயணிகளுக்கு எந்தவித சிரமமும் ஏற்படாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.