உலகக்கோப்பை லீக் போட்டிகள் வரும் 12ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. அன்றைய போட்டியில் இந்தியா – நெதர்லாந்து அணியை எதிர்கொள்கிறது.
அரையிறுதிப் போட்டிக்கு இந்திய அணி முதலில் தகுதி பெற்றதை அடுத்து இரண்டாவது அணியாக தென் ஆப்பிரிக்கா-வும் மூன்றாவது அணியாக ஆஸ்திரேலிய அணியும் அரையிறுதிக்கு நுழைந்துள்ளது.
நான்காவது இடத்திற்கு நியூஸிலாந்து, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இலங்கை அணிக்கு எதிராக இன்று தனது கடைசி லீக் போட்டியை விளையாடிய நியூஸிலாந்து அணி இலங்கை அணி நிர்ணயித்த 172 ரன் இலக்கை 5 விக்கெட் இழப்புக்கு 23.2 ஓவரில் எட்டியது.
இதன்மூலம் சராசரி ரன் விகிதத்தில் நியூஸிலாந்து அரையிறுதிக்கு நுழையும் வாய்ப்பை பெற்றுள்ளது.
அரையிறுதிக்கு நுழைய வாய்ப்புள்ள மற்ற இரண்டு அணிகளில் ஆப்கானிஸ்தான் அணி பலம் வாய்ந்த தென் ஆப்பிரிக்க அணியை நாளை எதிர்கொள்கிறது என்ற போதும் இதில் ஆப்கன் அணி வெற்றிபெற வாய்ப்புகள் குறைவாக உள்ளதாகவே கருதப்படுகிறது.
புள்ளிபட்டியலில் நியூஸிலாந்து அணிக்கு அடுத்து 5வது இடத்தில் இருக்கும் பாகிஸ்தான் அணி வரும் சனிக்கிழமை அன்று இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது.
இந்தப் போட்டியில் பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தால் இங்கிலாந்தை 287 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடிக்க வேண்டும் அல்லது இரண்டாவதாக விளையாடினால் 16 பந்துகளில் இங்கிலாந்து நிர்ணயிக்கும் இலக்கை அடையவேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அணிக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கும் இந்த இலக்கு மிகவும் கடினமான ஒன்று என்பதால் நியூஸிலாந்து அணியே அரையிறுதிக்கு நுழையும் வாய்ப்பை பெற்றுள்ளது.
தவிர அரையிறுதியில் நியூஸிலாந்து அணியே இந்திய அணியை எதிர்கொள்ள அதிக வாய்ப்புள்ள அணியாகக் கூறப்படுகிறது, இருந்தபோதும் வரும் சனிக்கிழமை இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி முடிந்தபின்தான் இது உறுதியாக தெரியவரும்.