சென்னை: அரசுபள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி பள்ளி வேலை நாட்களில் வாரத்தில் 5 நாட்களும் அளிக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை வழிகாட்டுதல்களை வெளியிட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவா்களுக்கு மாலை நேரத்தில் ஜேஇஇ, நீட் போன்ற மத்திய அரசின் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில், போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சி வகுப்பு மாலை நேரத்தில் வழங்கப்படவுள்ளது. இது தொடர்பான வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியின்போது, அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர 7.5% இடஒதுக்கீடு கொண்டு வந்த நிலையில், அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ள இலவச பயிற்சி வகுப்பையும் நடத்தியது. நீட் தேர்வுக்கான ஆன்-லைன் கட்டணமில்லா பயிற்சியினை வழங்கிட, ‘இ-பாக்ஸ்‘ என்ற நிறுவனத்துடன் பள்ளிக்கல்வி துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது. அதன்படி, ஆன்-லைன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது. இதன் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 250 முதல் 300 மாணவர்கள் மருத்துவம் படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.
பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், திமுக அரசு நீட் விலக்கு பெறலாம் என்ற நம்பிக்கையில் நீட் இலவச பயிற்சி வகுப்பை நிறுத்தியது. இது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியதும் மீண்டும் இலவச நீட் பயிற்சி வகுப்பு தொடங்கி நடத்தப்பட்டது.
இந்த நிலையில், தற்போது, பள்ளிகள் தொடங்கி 5மாதங்கள் முடிவடைந்த நிலையில், இன்னும் நீட் பயிற்சி வழங்காதது பெற்றோர் களிடையே அதிருப்தியை ஏற்படுத்திது. பல அரசு பள்ளிகளில் பெற்றோர்கள் இது தொடர்பாக தலைமை ஆசிரியர்களிடம் முறையிட்டனர். மேலும், மத்திய தேர்வுகளை எதிர்கொள்ள பயிற்சி வகுப்புகளை உடனடியாக தொடங்க வேண்டும் எனகோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிலையில், அரசு பள்ளிகளில் நீட் பயிற்சி வகுப்புகள் தொடங்குவதற்கான வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
இதுதொடா்பாக பள்ளிக்கல்வி இயக்குநரகம் சாா்பில் முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில் மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பயின்று வரும் மாணவர்களில் ஜே.இ.இ., நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வு எழுத விருப்பமும் ஆர்வமும் உள்ள மாணவர்களின் பட்டியல் தயார் செய்யப்பட வேண்டும்.
பெரும்பாலான மாணவர்கள் நுழைவுத் தேர்வு பயிற்சியில் பங்கேற்கும் வகையில், அனைத்து மாணவர்களையும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆர்வமூட்டி ஊக்கப்படுத்தலாம். ஆனால் கட்டாயப்படுத்துதல் கூடாது.
மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு பயிற்சி வழங்க, அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளித் தலைமை ஆசிரியர் தலைமையில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் முதுகலை பாட ஆசிரியர்களைக் கொண்ட குழு உருவாக்கப்பட வேண்டும்.
நுழைவுத் தேர்வுகளுக்கு பயிற்சி அளிப்பதில் தன்னார்வத்துடன் செயல்படவல்ல ஓய்வுபெற்ற ஆசிரியர்களையும் மற்றும் நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெற்று உயர்கல்வி பயின்று வரும் மாணவர்களையும் தன்னார்வலர்களாக செயல்பட விருப்பம் இருப்பின் இக்குழுவில் இணைத்துக் கொள்ளலாம்.
அனைத்து வேலைநாட்களிலும் பாடவாரியாக மாலை 4மணி முதல் 5.30 மணி வரை பின்வருமாறு ஜே.இ.இ., நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கு பள்ளியிலேயே பயிற்சி வகுப்புகள் நடத்தலாம்.
தாவரவியல், கணித பாடங்கள் திங்கள்கிழமை, இயற்பியல் பாடம் செவ்வாய்க்கிழமை, விலங்கியல் மற்றும் கணித பாடங்கள் புதன்கிழமை யும் வேதியியல் பாடம் வியாழக்கிழமையும , மீள் பார்வை மற்றும் சிறு தேர்வு வெள்ளிக்கிழமையும் கால அட்டவணைப்படி திட்டமிட்டு நடத்தப்பட வேண்டும்.
பள்ளி அளவிலான தினசரி தேர்வுகள் வார இறுதி நாளில் பயிற்சி வகுப்புகள் மற்றும் அரையாண்டு மற்றும் முழு ஆண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு பயிற்சி வழங்கிட மாநிலக்குழு உதவி புரியும்.
மேலும், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகம் வழியேயும் மாணவர்களுக்கு தேர்விற்கான பயிற்சிகள் வழங்கப் படும். அதுசார்ந்து அவ்வப்போது வாட்ஸ்அப்பில் பகிரப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.