சென்னை: ஆர்எஸ்எஸ் பேரணி அனுமதி வழங்காத செயல் தமிழ்நாடுஅரசின் நிர்வாக திறமையின்மை என்று கடுமையாக விமர்சித்த நீதிபதி, இதுதொடர்பாக உள்துறை செயலாளர், டிஜிபி நேரில் ஆஜரா உத்தரவிட்டது.
சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தும், ஆர்எஸ்எஸ் பேரணி மற்றும் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்காத காவல்துறைக்கு எதிராக, ஆர்எஸ்எஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழ்நாடு உள்துறை செயலாளர், டிஜிபி நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டின் 76-வது சுதந்தர தினம், விஜய தசமி மற்றும் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அக்டோபர் 22 மற்றும் 29-ம் தேதிகளில் தமிழகத்தின் 33 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி ஆர்எஸ்எஸ் அமைப்பினர் காவல்துறையினரிடம் மனு கொடுத்தனர். அவர்கள் நிராகரித்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அனுமதி பெற்றனர்.
இந்த வழக்கின் கடந்த விசாரணையின்போது, ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும் என காவல் துறைக்கு உத்தரவிடப்பட்டது. இந்த அனுமதியை நிகழ்ச்சி நடப்பதற்கு 5 தினங்களுக்கு முன்பே வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து ஆர்எஸ்எஸ் தரப்பில் காவல்துறையிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால், பல இடங்களில் காவல்துறை அனுமதி மறுத்தது. இதையடத்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் ஊர்வலத்துக்கு காவல் துறை அனுமதிக்கவில்லை என்பதால் ஆர்எஸ்எஸ் தரப்பில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆர்எஸ்எஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழ்நாடு உள்துறை செயலாளர், டிஜிபி நேரில் ஆஜராகி பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றம் ஆணையிட்டு அணிவகுப்புக்கு அனுமதிதராதது அரசின் நிர்வாக திறமையின்மையை காட்டுகிறது என நீதிபதி கூறினார். மேலும், இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளோம், நாளை மறுநாள் மனு விசாரணைக்கு வருகிறது எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.