சென்னை : கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் அருகே ஆக்கிரமிக்கப்பட்டிருந்த ரூ.800 கோடி மதிப்புடைய 4.5 ஏக்கர் அரசு நிலம் மீட்கப்பட்டு உள்ளது.
சென்னை உள்பட பல பகுதிகளில் அரசு நிலங்கள், கோவில் நிலங்கள் போன்றவற்றை தனியார்களும், அரசியல்வாதிகளும், ரவுடிகளும் ஆக்கிரப்பு செய்யும் நடவடிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு எவ்வளவு நடவடிக்கை எடுத்தாலும் அதையும் மீறி ஆக்கிரமிப்புகள் தொடர்கதையாகி வருகிறத.
இந்த நிலையில், சென்னையின் மத்திய பகுதியான கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் அருகில் ரூ. 800 கோடி மதிப்புடைய 4.5 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது. இந்த இடத்தில், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமித்து இயங்கி வந்த, வங்கி, கிறிஸ்தவ மதப் பிரச்சார கூடம், வீடுகள் உள்பட 30 கட்டிடங்களுக்குச் சீல் வைக்கப்பட்டு அகற்றப்பட்டது.
செங்கல்பட்டு ஆட்சியர் உத்தரவின் பேரில் வருவாய் துறையினர் இந்த அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
முன்னதாக கடந்த செப்டம்பர் மாதம், கத்திப்பாரா அருகே அரசுக்கு சொந்தமான ரூ. 150கோடி மதிப்பிலான ஒரு ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது. அந்த இடத்தில் தனியார் சிலர்கடைகள் கட்டி வியாபாரம் செய்து ‘வந்தனர். அங்கிருந்த மின் இணைப்பை துண்டித்து 25 கடைகளுக்கு சீல் வைத்து பல்லாவரம் வட்டாட்சியர் நடவடிக்கை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.