சென்னை:  சென்னையின் பல பகுதிகளில் அரசியல் கட்சியினர், சமூக அமைப்பினரின் கொடிக்கம்பங்கள் உள்ள நிலையில், பாஜக சார்பில், புதிய கொடிக் கம்பம் அமைக்க  அனுமதி கோரப்பட்ட நிலையில், அதற்கு சென்னை காவல்துறையினர் மறுப்பு தெரிவித்து உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


சென்னையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வீட்டின் முன்பு இரவோடு இரவாக பாஜக கொடிக்கம்பம்  காவல்துறையினரால் அகற்றப்பட்டது. இதை எதிர்த்து போராட்டம் நடத்திய பாஜக துணைத்தலைவர் அமர்பிரசாத் ரெட்டி உள்பட பலரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதுபோல, , தென்காசி கடையம் அருகே உள்ள வள்ளியம்மாள்புரத்திலும் பாஜக கொடிக் கம்பம் அகற்றப்பட்டுள்ளது. இது பெரும பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை உள்பட மாநிலம் முழுவதும் அரசியல் கட்சியினர் பலர் எந்தவித அனுமதியும் இன்று கொடி கம்பங்களை சாலையோரங்களிலும், பல பகுதிகளிலும் நட்டி உள்ள நிலையில் பாஜகவினர் கொடி கம்பங்களை அகற்றியும், புதிய கொடிக்கம்பங்கள் நட்ட அனுமதி மறுத்தும் தமிழ்நாடு அரசு முரண்டு வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில்,   சென்னையில் பாஜகவினர் புதிய கொடிக் கம்பம்  அமைக்க  காவல்துறையிடம் அனுமதி கோரிய நிலையில், அதற்கு சென்னை போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.

ஏற்கனவே மற்ற கட்சியினர் வைத்துள்ள இடங்களில்தான், பாஜகவினர் கொடி கம்பம் வைக்க அனுமதி கோரிய நிலையில், அதற்கும் காவல்துறை  அனுமதி மறுத்துள்ளது.

பாஜகவுக்கு கொடிக்கம்பம் அனுமதி மறுக்கப்பட்ட காரணத்தை கூறிய காவல்துறை,  அவர்களின் மனுவுடன் மாநகராட்சியிடம் அனுமதி பெற்ற கடிதம் இணைக்கப்படவில்லை என தெரிவித்து உள்ளனர்.

முன்னதாக பாஜக கொடிக்கம்பம் அமைக்க சென்னை மாநகராட்சியும்  அனுமதி மறுத்துவிட்டது. மேலும் அனுமதியின்றி கொடிக் கம்பம் வைத்தால் மாநகராட்சி மூலம் அகற்றப்படும் என போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

முன்னதாக தமிழ்நாட்டில் அரசு அனுமதியின்றி கொடிக்கம்பங்கள் நடக்கூடாது என சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு உள்ள நிலையில், தற்போது பாஜக அறிவித்துள்ள 10ஆயிரம் கொடிக்கம்பங்கள் நடுவது தொடர்பாகவும் பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கில் அனைத்து அரசியல் கட்சிகளையும் சேர்க்க உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.