சென்னை
தமிழக அரசு மாநிலம் முழுவதும் மாஞ்சா நூலுக்குத் தடை விதித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
நாடெங்கும் காற்றாடி விட மாஞ்சா நூல் எனப்படும் கெட்டியான நூல் பயன்படுத்தப்படுகிறது. இந்த நூல் அறுபட்டு கீழே விழும் போது அந்த நூலினால் பலர் காயமடைகின்றனர். ஒரு சில வேளைகளில் கழுத்து அறுபட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது. எனவே மாஞ்சா நூலுக்கு அவ்வப்போது தடை விதிக்கப்பட்டு அந்த தடையை அரசு நீட்டித்து வருகிறது.
இந்நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தமிழகம் முழுவதும் நைலான், பிளாஸ்டிக் அல்லது பிற செயற்கையே பொருட்களால் செய்யப்பட்ட மாஞ்சா நூல்கள், அல்லது காற்றாடி பறக்கும் நூல்களின் விற்பனை, கொள்முதல் , இறக்குமதி மற்றும் பான்பாட்டுக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அரசாணையில் பறவைகள், கால்நடைகள் மற்றும் மனித உயிர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் மாஞ்சா நூல்கள் மட்காத ப்ளாஸ்டிக் பொருட்களால் தயாரிக்கப்படுவதால் சுற்றுச்சூழலுக்கும் சீர்கேடாக அமைகின்றன. உயிர்களையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் பொருட்டு மாஞ்சா நூல்களுக்குத் தடைவிதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.