சென்னை: மாலத்தீவு கடற்படையால் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் 12 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளதாக இந்திய அரசு தெரிவித்து உள்ளது.
தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், கடந்த 23ந்தி அன்று மாலத்தீவு அருகே உள்ள பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த மாலத்தீவு கடற்படையினர் அவர்களை கைது செய்தனர். தங்களது கடற்எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாகக் கூறி, 12 பேரையும் மாலத்தீவு கடற்படையினா் கைது செய்து, விசைப்படகையும் பறிமுதல் செய்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து, கடற்படையினா் அளித்த தகவலின்பேரில், மீனவா்கள் குடும்பத்தினா் சோகத்தில் மூழ்கினா். மேலும், 12 பேரையும் மீட்க மத்திய- மாநில அரசுகள் மீட்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவா்களின் உறவினா்களும், விசைப்படகு உரிமையாளா் சங்கத்தினரும் கோரிக்கை விடுத்திருந்தனர். தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினும் மத்தியஅரசுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்த நிலையில், மாலத்தீவு கடற்படையால் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் 12பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் பகுதியைச் சோ்ந்த மைக்கேல் பாக்கியராஜ், மகேஷ்குமாா் பரமசிவம், ஆதிநாராயணன், வேம்பாரைச் சோ்ந்த அதிசய பரலோக திரவியம், அந்தோணி செல்வசேகரன் பரலோக பிரான்சிஸ், அந்தோணி அன்சல் கிறிஸ்டோபா், சிலுவைப்பட்டி அன்புசூசை மிக்கேல், ராமநாதபுரம் மணி, சக்தி, ராமேஸ்வரம் உதயகுமாா், விக்னேஷ், மதுரை மாதேஷ்குமாா் துரைப்பாண்டி ஆகிய 12 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால், அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்த விசைப்படகை விடுவிக்க மாலத்தீவு அரசு மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
தங்களது விசைப்படகை விடுவித்தால்தான் சொந்த ஊர் செல்வோம் எனக் கூறி மீனவர்கள் மாலத்தீவிலேயே உள்ளனர். விசைப்படகையும் சேர்த்து மாலத்தீவு அரசு விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.