டெல்லி: ஜனவரி 22-ம் தேதி ராமர் கோயில் திறப்பு விழாவில் பிரதமர் மோடி உள்பட 136 சனாதன பாரம்பரியங்களைச் சேர்ந்த 25,000 இந்து மதத் தலைவர்கன் ‘பங்கேற்பார்கள் என கோவில் அறக்கட்டளை தெரிவித்து உள்ளது.
அயோத்தியில், ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்தஷேத்ரா அறக்கட்டளை அமைக்கப்பட்டு அங்கு பிரமாண்டமான முறையில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணியை உத்தர பிரதேச அரசு மேற்பார்வையிட்டு வருகிறது. முன்னதாக ராமர் கோயிலுக்கு கடந்த 2020 ஆகஸ்டில் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். கட்டுமானப் பணிகளை இன்னும் இரண்டு மாதங்களில் முடித்து அடுத்த ஆண்டு ஜனவரி 22-ம் தேதி கோயில் திறப்பு விழா நடைபெற உள்ளது. இதையடுத்து, இந்த விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் பிரமாண்டமான முறையில், இந்திய வரலாற்றை பறை சாற்றும் வகையில் கட்டப்பட்டு வருகிறது. கட்டுமானப் பணிகளை இன்னும் இரண்டு மாதங்களில் முடித்து அடுத்த வருடம் ஜனவரி 22-ம் தேதி கோயில் திறப்பு விழா நடைபெற உள்ளது. அன்றைய தினம் கோயிலில் ராமர் சிலை நிறுவப்படுகிறது.
இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். இதற்கான அழைப்பிதழ் ஸ்ரீராமர் கோயில் தீர்த்தஷேத்ரா அறக்கட்டளை சார்பில் பிரதமர் மோடியிடம் அளிக்கப்பட்டது. அழைப்பிதழை பெற்றுக்கொண்ட பிரதமர் மோடி, அதுதொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.
அதில், “நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். எனது வாழ்நாளில், இந்த வரலாற்று நிகழ்வைக் காண்பது எனது அதிர்ஷ்டம்” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதேபோல், “இன்று உணர்ச்சிகள் நிறைந்த நாள். ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்தஷேத்ரா அதிகாரிகள் என்னை சந்திக்க எனது இல்லத்துக்கு வந்திருந்தனர். ஸ்ரீராமர் கோயில் திறப்பு விழாவையொட்டி அயோத்திக்கு வருமாறு என்னை அழைத்தனர்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, கோயில் திறப்பு விழாவில் 136 சனாதன பாரம்பரியங்களைச் சேர்ந்த 25,000 இந்து மதத் தலைவர்களை அழைக்க அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது. இதுதவிர, 10,000 சிறப்பு விருந்தினர்களும் பங்கேற்பார்கள் என்றும் அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.