சென்னை: கிண்டியில் உள்ள தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின்மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், “குண்டுகளை வீசியவர்கள் உள்ளே நுழைய முயன்றனர்” என்று ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளதுடன் இது தொடர்பாக காவல்துறையில் ஆளுநர் மாளிகை சார்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு அரசுக்கும், கவர்னருக்கும் இடையே பனிப்போர் தீவிரமடைந்து வரும் நிலையில், சென்னை கிண்டியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் மாளிகை முன்பு இரண்டு சக்கர வாகனத்தில் வந்த நபர் ஒரு பொருளைத் தூக்கி வீசியெறிந்தார். பாதுகாப்புக்கு நின்று கொண்டிருந்த காவலர்கள் இதைக் கவனித்துவிட்டனர்.
உடனே, பாதுகாப்புப் பணியிலிருந்து காவல் அதிகாரிகள், அந்த பொருள் பக்கத்தில் சென்று பார்த்த போது அது பெட்ரோல் குண்டு என தெரிந்ததும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து, அந்த நபரை விரட்டிப் பிடித்து பத்திரமாகக் கிண்டி காவல் நிலையத்தில் உள்ள போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் மேலும் இரு பெட்ரோல் குண்டுகள் இருந்ததாகவும், அதை வீச முயல்வதற்குள் போலீஸாா், அந்த நபரை மடக்கிப் பிடித்து, 2 பெட்ரோல் குண்டுகளையும் பறிமுதல் செய்தனா்.
இந்த சம்பவத்தில் பெட்ரோல் குண்டுகள் சரியாக வெடிக்காததால் யாருக்கும் காயமோ,பொருள் சேதமோ ஏற்படவில்லை.அந்த நபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, அவரது பெயர் கருக்கா வினோத் என்பதும், அவர் பிரபல ரவுடி என்பதும், இவர் பல்வேறு குற்றப் பின்னணி கொண்டவர் என்பதும் தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், ஆளுநர் மாளிகை முன்பு எதற்காக, பெட்ரோல் குண்டு வீசினார் என காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட வினோத் என்ற ரவுடி, தமிழக பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில், கைதாகி கடந்த வாரம்தான் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளதாகவும், தற்போது முஸ்லீம் தீவிரவாதிகள் சிறையிலிருந்து விடுதலை செய்ய வேண்டி பெட்ரோல் குண்டை வீசியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், காவல்துறை வினோத் குடித்து விட்டு பெட்ரோல் குண்டை வீசியாக விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை தெற்கு கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா விளக்கம் அளித்தபோது, “ஆளுநர் மாளிகைக்கு முன் வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்பு மீதுதான் பெட்ரோல் குண்டு விழுந்தது. பெட்ரோல் குண்டு வீச்சில் எந்த சேதமும் இல்லை. பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
ரவுடி கருக்கா வினோத் மீது 7-க்கும் மேற்ப்டட வழக்குகள் நிலுவையில் உள்ளன. பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத் மதுபோதையில் இருந்துள்ளார். 2 நாட்களுக்கு முன்பு தான் கருக்கா வினோத் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். பாட்டிலில் பெட்ரோலை வைத்து வீச முயற்சி நடைபெற்றது. பாதுகாப்பிலிருந்த காவலர்கள் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அவரிடமிருந்து சில பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரவுடியிடம் காவல் நிலையத்தில் வைத்து தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது. ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பு குறைபாடு எதுவும் இல்லை” என்றார்.
இதைத்தொடர்ந்து, பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக காவல்துறையில் ஆளுநர் மாளிகை புகார் அளித்துள்ளது. புகார் மனுவில், பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறிய பெட்ரோல் குண்டால், ஆளுநர் மாளிகையின் முன்பகுதி சேதம் அடைந்ததாகவும், ஆளுநர் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் திமுகவினர் தொடர்ந்து பேசி வருகின்றனர் என்றனர், பொதுக்கூட்டங்களில் ஆளுநரை மிரட்டும் வகையில் திமுக கூட்டணி கட்சிகள் பேசி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநரை அச்சுறுத்துபவர்கள் மீது புகார் கொடுத்தும் தமிழ்நாடு அரசு இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க வில்லை என்றும் குற்றம் சாட்டி உள்ளது.
ஆளுநர் மாளிகை தான் தாக்குதல் குறித்து விளக்கமளித்துள்ள ஆளுநர் மாளிகை தனது X தள பக்கத்தில், “ஆளுநர் மாளிகை மீது இன்று பிற்பகலில் தாக்குதல் நடத்தப்பட்டது. வெடிகுண்டுகளை ஏந்திய விஷமிகள் பிரதான வாயில் வழியாக உள்ளே நுழைய முயன்றனர். எனினும் உஷாராக இருந்த காவலர்கள் தடுத்ததால், இரண்டு பெட்ரோல் குண்டுகளை ராஜ்பவனுக்குள் வீசிவிட்டு தாக்குதல் நடத்தியவர்கள் தப்பினர்” என்று பதிவிட்டுள்ளது.
இதனிடையே, சம்பவம் குறித்து ஆளுநர் மாளிகை தரப்பில், IPC 124-இன் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு தமிழக டிஜிபிக்கு கடிதம் அனுப்பப்பட்டது. மேலும், பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத் என்ற நபர் 2 பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டார். பின், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நவம்பர் 9ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 124 என்பது, இந்திய குடியரசுத் தலைவர் அல்லது மாநிலத்தின் ஆளுநரின் சட்டப்பூர்வ அதிகாரங்களில் ஏதாவது ஒன்றை, ஏதாவது ஒரு முறையில் பயன்படுத்துவதற்கு அல்லது தவிர்ப்பதற்கு அத்தகைய குடியரசுத் தலைவர் அல்லது ஆளுநரைத் தூண்டும் அல்லது கட்டாயப் படுத்தும் உள் நோக்கத்துடன், அத்தகைய குடியரசுத் தலைவர் அல்லது ஆளுநரைத் தாக்கினால் அல்லது முறையின்றித் தடுத்தால் அல்லது முறையின்றி தடுப்பதற்கு முயன்றால் அல்லது குற்றமுறு பலப்பிரயோகக் காட்டுதலால் பணிய வைத்தால் அல்லது அவ்வாறாக பணிய வைக்க முயன்றால் ஏழு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய சிறை தண்டனை அபராதத்துடன் விதிக்கப்படும்.
ஆளுநர் மாளிகை மீதான குண்டுவீச்சுக்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள கண்டனத்தில், ராஜ்பவன் மீது இன்று பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது, தமிழகத்தின் உண்மையான சட்டம்-ஒழுங்கைப் பிரதிபலிக்கிறது. முக்கியமில்லாத விஷயங்களில் மக்களின் கவனத்தை திசை திருப்புவதில் திமுக மும்முரமாக இருக்கும்போது, குற்றவாளிகள் தெருக்களில் இறங்கி விட்டனர்.
2022 பிப்ரவரியில் சென்னையில் உள்ள தமிழக பாஜக தலைமையகத்தை தாக்கிய அதே நபர் தான் இன்று ராஜ்பவன் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பொறுப்பேற்க வேண்டும்.
இந்தத் தொடர் தாக்குதல்களுக்கு திமுக அரசுதான் நிதியுதவி செய்கிறது என்று நினைக்கத் தோன்றுகிறது. முதல்வர் ஸ்டாலின் எப்பொழுதும் செய்வது போல் இப்போதும் இதை திசைதிருப்ப தயாராகிக்கொண்டிருப்பார் என தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, சென்னை தியாகராயநகா் வைத்தியராமன் தெருவில் அமைந்துள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் 2022-ஆம் ஆண்டு பிப். 10-ஆம் தேதி பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் சுருக்கா வினோத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா். இந்த வழக்கில் நீண்ட நாள்களாக பிணை கிடைக்காமல் வெளியே வர முடியாமல் இருந்த அவா், கடந்த 20-ஆம் தேதி பிணை கிடைத்து, சிறையிலிருந்து வெளியே வந்தாா். மேலும் இது தொடா்பாக ஆளுநா் மாளிகை சாா்பில் வழங்கப்பட்ட புகாரின் அடிப்படையில், கிண்டி போலீஸாா் வெடி பொருள் தடை சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் அவா் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது.