சென்னை: அரபிக்கடலில் உருவான தேஜ் புயல் ஏமன் நாட்டின் கடற்கரையில் இன்று அதிகாலை கரையை கடந்தது என்றும், வங்கக்கடலில் ஹமூன் புயல் உருவாகியுள்ளதாகவும் இந்திய வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
அரபிக்கடலில் தேஜ் புயல் அதி தீவிர புயலாக வலுப்பெற்றிருந்த நிலையில் இன்று அதிகாலை கரையை கடந்தது. தேஜ் புயல் மிக தீவிர புயலாக வலுவிழந்து இன்று அதிகாலை ஏமன் அருகே 2.30 மணி முதல் 3.30 மணிக்குள் கரையை கடந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கரையை கடந்தது.
தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவியது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு அரபி கடல் பகுதிகளில் புயலாக உருவெடுத்தது. தென்மேற்கு அரபி கடலில் உருவாகிய இந்த புயலுக்கு ‘தேஜ்’ என பெயரிடப்பட்டது.
இந்த நிலையில், இந்த புயல் தீவிர புயலாக வலுப்பெற்று பின்னர் அதி தீவிர புயலாக மாறி ஏமன், ஓமன் நாடுகளை நோக்கி நகர்ந்து வந்தது. இந்நிலையில் அரபிக்கடலில் மையம் கொண்டிருந்த தேஜ் புயலானது, ஏமன் நாட்டின் கடற்கரையில் இன்று அதிகாலை 2.30 முதல் 3.30 க்குள் கரையை கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. புயலானது கரையை கடக்கும் போது 125-135 கி.மீ வேகத்தில் காற்று வீசியதாகவும் தெரிவித்துள்ளது.
அதுபோல வங்கக்கடலில் ஹமூன் புயல் உருவாகியுள்ள நிலையில் 9 துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் கூண்டு ஏற்றபட்டுள்ளது. சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றபட்டுள்ளது
இந்த புயல் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்து உள்ளது.
2018ம் ஆண்டிற்கு பிறகு (லுபான் மற்றும் தித்லி) ஒரே நேரத்தில் வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் ’தேஜ் மற்றும் ஹாமூன்’ ஆகிய இரண்டு புயல்கள் மையம் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.