ஹாங்கோ: சீனாவில் நடைபெற்று பாரா ஆசிய போட்டிகளில், உயரம் தாண்டுதல் போட்டியில் கலந்துகொண்ட தமிழக வீரர் சேலம் மாரியப்பன் தங்கவேலு, வெள்ளிப்பதக்கம் வென்றார். இந்த போட்டியில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என 3 பதக்கங்களையும் இந்தியா வென்றுள்ளது. அதுபோல மகளிருக்கான படகு போட்டியில் இந்திய வீராங்கனை பிரச்சி யாதவ் வெள்ளிப் பதக்கம் வென்றார். வெற்றி பெற்றவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
சீனாவில் உள்ள ஹாங்சோ நகரில் ஏற்கனவே ஆசிய போட்டிகள் நடைபெற்று முடிந்த நிலையில், தற்போது பாரா ஆசிய போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகள் 22ந்தி தொடங்கிய நிலையில், வரும் 28ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த பாரா போட்டியில் இந்தியா சார்பில், 191 வீரர்கள், 112 வீராங்கனைகள் என மொத்தம் 303 பேர் கலந்துக் கொண்டுள்ளனர்.
இதில் நடைபெற்ற ஆடவர் உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் சைலேஷ் குமார் தங்கம் வென்றுள்ளார். தொடர்ந்து, தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு வெள்ளி பதக்கமும், ராம் சிங் வெண்கலம் வென்றார். ஆடவர் உயரம் தாண்டுதலில் 3 பதக்கங்களையும் இந்தியா வென்று அசத்தியுள்ளது.
அத்துடன் மகளிருக்கான படகு போட்டியில் பிரச்சி யாதவ் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ஆசிய பாரா விளையாட்டில் “உயரம் தாண்டுதலில் வெள்ளி வென்று தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் மீண்டும் ஒருமுறை பெருமை தேடித் தந்துள்ளார்: மாரியப்பன் தங்கவேலுவுக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள்” என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் உதயநிதி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் ”ஆசிய பாரா விளையாட்டில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற நம் தமிழ்நாட்டு வீரர் தம்பி மாரியப்பன் தங்கவேலுவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். இந்த பிரிவில், தங்கம், வெள்ளி, வெண்கலம் என மூன்று பதக்கங்களையும் இந்திய வீரர்கள் பெற்றுள்ளது மகிழ்ச்சியை தருகிறது. பதக்கம் வென்ற நம் வீரர்களுக்கு பாராட்டுகள்” என குறிப்பிட்டுள்ளார்.