சென்னை: தமிழ்நாட்டுக்கும், கர்நாடகாவுக்கும் இடையே மீண்டும் காவிரி நீர் பிரச்சினை எழுந்துள்ள நிலையில், காவிரி ஒழுங்காற்று குழு மீண்டும் கூடுவதாக அறிவித்து உள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு உள்பட 4 மாநிலங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
தமிழ்நாட்டுக்கு கொடுக்கப்பட்ட வேண்டிய காவிரி நீரை திறந்துவிட கர்நாடக அரசு மறுத்து வருகிறது. இதுதொடர்பாக, உச்சநீதிமன்றம், காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்று மையம் என உயர் அமைப்புகள் உத்தரவிட்டும் கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு, தண்ணீரை திறந்துவிட மறுத்து வருகிறது. அம்மாநில மக்களை தூண்டிவிட்டு போராட்டங்களை நடத்தி வருகிறது.
இந்த விஷயத்தில் கர்நாடக காங்கிரஸ் அரசிடம் பேச கூட்டணி கட்சி அரசான தமிழ்நாடு அரசும் முயற்சி மேற்கொள்ள தயங்கி வருகிறது. அதுபோலே, கர்நாடக மாநில அரசுமீது கடுமையான நடவடிக்கை எடுக்க மத்தியஅரசு மற்றும் உச்சநீதிமன்றமும் தயங்கி வருகிறது. இதை சாதகமாக கர்நாடக அரசு பயன்படுத்தி தமிழக விவசாயகிளை வஞ்சித்து வருகிறது.
இநத் நிலையில், காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படுவது தொடர்பாக, காவிரி ஒழுங்காற்று மையம், காவிரி மேலாண்மை வாரியம் ஆகியவை தமிழகம், கர்நாடகா , கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த காவிரி ஒழுங்காற்று மையத்தால் மாநில அரசுகளுக்கு உத்தரவுகளை பிறப்பிக்க முடியாது என்பதால், 4 மாநில நீர்வளத்துறை நிர்வாகிகளோடு கலந்து ஆலோசனை செய்து, அணைகளில் உள்ள நீர்நிலைகளில் இருப்புகளை அறிந்து எந்தளவு தண்ணீரை திறந்துவிடலாம் என்பது குறித்த பரிந்துரைகளை வெளியிடும். இதை ஏற்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிடும்.
ஆனால், இந்த உத்தரவுகளை கர்நாடக மாநில அரசு ஒருபோதும் நடைமுறைப்படுத்துவது இல்லை என்பதே உண்மை நிலவரம். இப்படி இருக்க, தற்போது 89வது முறையாக மீண்டும் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. . இதுவரை 88 காவிரி ஒழுங்காற்று குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ள நிலையில், 89வது கூட்டம் அக்டோபர் 30ந்தேதி கூடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து காவிரி மேலாண்மை வாரிய ஆலோசனை கூட்டமும் நடைபெற உள்ளது.
அன்றைய தின கூட்டத்தில், ஏற்கனவே காவிரி மேலாண்மை வாரியம் கூறியது போல வினாடிக்கு 3 ஆயிரம் கன அடிநீர் தமிழகத்திற்கு திறக்கப்பட்டதா , கர்நாடக நீர் நிலைகளில் உள்ள நீர் இருப்பு நிலவரம், தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரின் அளவு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இந்த கூட்டத்தில் தமிழகம் , கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநில அதிகாரிகள் காணொளி வாயிலாக கலந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.