ரஜினிகாந்த் நடிப்பில் டி.ஜெ. ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தலைவர் 170’ படத்தின் படப்பிடிப்பு நெல்லையில் நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பிற்காக கடந்த வாரம் திருவனந்தபுரம் சென்ற ரஜினிகாந்த் பின்னர் நெல்லையில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் நடைபெற்ற படப்பிடிப்பில் நான்கு நாட்கள் கலந்து கொண்டார்.

அப்போது கன்னியாகுமரியில் ஓரிரு நாட்கள் தங்கியிருந்த ரஜினிகாந்த்தை முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் சந்தித்து பேசினார்.

இதனைத் தொடர்ந்து படப்பிடிப்பு முடிவடைந்ததும் தூத்துக்குடி விமான நிலையம் வந்த ரஜினிகாந்த் அங்கிருந்து சென்னை புறப்பட்டார்.

 

2018ம் ஆண்டு ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது தூத்துக்குடி வந்த ரஜினிகாந்த் தற்போது மீண்டும் தூத்துக்குடி வந்ததை அடுத்து விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார், “1977 ம் ஆண்டு வெளியான புவனா ஒரு கேள்விக்குறி படத்திற்குப் பிறகு தென் மாவட்டத்தில் படப்பிடிப்பு நடைபெறுவது இதுவே முதல்முறை” என்று அப்போது ரஜினிகாந்த் தெரிவித்தார்.

மேலும், “தென் மாவட்ட மக்கள் மிகவும் அன்பான மக்கள் அவர்களை பார்த்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது” என்று கூறியுள்ளார்.