சென்னை

மிழக அமைச்சர் அன்பில் மகேஷுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் ஆசிரியர்கள் போராட்டம் திரும்பப் பெறப்பட்டுள்ளது.

தமிழக தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் கூட்டுக் குழு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். எமிஸ், டி.என்.எஸ்.இ.டி. போன்ற ஆன்லைன் பதிவேற்றப் பணிகளில் இருந்து ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும். எண்ணும் எழுத்தும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி) போராட்டத்தை அறிவித்து இருந்தது.

நேற்று முன் தினம் போராட்டம் அறிவித்த ஆசிரியர் சங்கங்களுடன், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்தனர். இதையடுத்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் பேச்சுவார்த்தை நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

நேற்று காலை ஆசிரியர் சங்கங்கள் பேச்சுவார்த்தைக்கு வருவார்கள் என்று காத்திருந்ததாகவும், ஆனால் அவர்கள் வரவில்லை என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். மேலும் எப்போது வேண்டுமானாலும் வந்து தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம் எனவும் கூறியிருந்தார்.

பிறகு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அமைச்சரின் முகாம் அலுவலகத்துக்கு, ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகள் 30 அம்ச கோரிக்கைகள் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சென்றனர்.  அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியபோது பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளும் உடன் இருந்தனர்.

இந்த பேச்சுவார்த்தையின்போது ஆசிரியர் சங்கங்கள் தங்களுடைய கோரிக்கைகள் தொடர்பாக முன் வைத்த அனைத்து விவரங்களையும் கேட்ட அமைச்சர், கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் உள்ள விஷயங்கள் குறித்து அதிகாரிகளிடமும் பேசினார். இந்த பேச்சுவார்த்தை முடிவில் சில கோரிக்கைகளை ஏற்பதாக அமைச்சர் உறுதி அளித்ததால், உடன்பாடு ஏற்பட்டதாக ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

ஆசிரியர் சங்க நிர்வாகிகளான தாஸ், வின்சென்ட் பால்ராஜ் ஆகியோர் செய்தியாளர்களிடம் ’30 அம்ச கோரிக்கைகளில் 11 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். முக்கிய கோரிக்கையான எமிஸ் உள்ளிட்ட 43 வகையான ஆன்லைன் பதிவேற்றங்களை அடுத்த மாதம் (நவம்பர்) 1-ந்தேதியில் இருந்து ஆசிரியர்கள் பதிவேற்றம் செய்ய வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர்.