சென்னை: முன்னாள் மத்திய அமைச்சரும் தற்போதைய திமுக எம்பியுமான ஜெகத்ரட்சகன் தொடர்புடைய 40க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இதற்கு திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
வருமான வரி முறைகேடு தொடர்பாக திமுக எம்.பி, ஜெகத்ரட்சகன் தொடர்புடைய கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், வீடுகள் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த வருமான வரி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இன்று காலையில் சென்னை அடையாறில் உள்ள ஜெகத்ரட்சகன் வீட்டுக்கு வந்த வருமான வரித்துறை அதிகாரிகள், மத்திய தொழிற்பாதுகாப்புப் படையினரோடு அங்கே வந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வருமான வரித்துறையினர் அவரது வீட்டுக்கு வந்தபோது, ஜெகத்ரட்சகன் தனது உதவியாளர்களுடன் பேசிக் கொண்டு இருந்திருக்கிறார். அவரை மட்டும் வீட்டுக்குள் இருக்கச் சொன்ன அதிகாரிகள் மற்ற அனைவரையும் வீட்டு வாசலில் நிற்க வைத்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இது திமுகவினரிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே திமுக அமைச்சர்களின் வீடுகளில் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை அவ்வப்போது சோதனைகள் நடத்தி வந்த நிலையில், இன்று திமுக எம்.பி. வீடுகளில் சோதனை நடைபெற்று வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (அக்டோபர் 5) வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஒன்றிய பாஜக அரசின் பழிவாங்கும் அரசியலுக்கு எல்லையே இல்லை! ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங்கைக் கைது செய்ததும், திமுக எம்பி ஜெகத்ரட்சகனின் வீட்டில் சோதனை நடத்துவதும் சுயேச்சையான விசாரணை அமைப்புகளை இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு எதிராக, தவறாகப் பயன்படுத்தி வருவதற்கான தெளிவான எடுத்துக்காட்டுகளாகும்.
எதிர்க்கட்சித் தலைவர்களை திட்டமிட்டு துன்புறுத்துவது ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகும். அமலாக்கத்துறையின் நடவடிக்கைகள் வெளிப்படையாகவும் நியாயமாகவும் இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் எச்சரித்ததை பாஜக அரசு வசதியாக மறந்துவிடுகிறது. அவர்கள் சட்டத்தின் ஆட்சியையும் ஜனநாயகத்தையும் புறக்கணிப்பதிலேயே கவனமாக இருக்கிறார்கள். எதிர்க்கட்சிகளிடையே வளர்ந்து வரும் ஒற்றுமையை கண்டு பா.ஜ.க பயப்படுவது தெளிவாகத் தெரிகிறது. எதிர்க்கட்சியினரை நோக்கிய வேட்டையை நிறுத்திவிட்டு மக்களின் உண்மையான பிரச்சினைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது” என்று தெரிவித்துள்ளார்.