சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டி ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய வீரர்கள் நீரஜ் சோப்ரா மற்றும் கிஷோர் ஆகியோருக்கு எதிராக சர்ச்சைக்குரிய முடிவு எடுக்கப்பட்டது.
நடுவர்களின் இந்த முடிவு இந்திய அதிகாரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது இதனையடுத்து தங்களின் எதிர்ப்பை பதிவு செய்ய அவர்கள் தீர்மானித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
நீரஜ் சோப்ரா முதல் தடவை எறிந்த தூரம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கணக்கிட முடியவில்லை என்று போட்டியின் நடுவர்கள் கூறியதை அடுத்து களத்திலேயே தனது எதிர்ப்பை தெரிவித்தார் நீரஜ் சோப்ரா.
87 முதல் 88 மீட்டர் தூரம் சென்றது பார்த்தவர்கள் அனைவருக்கும் தெரிந்திருந்தும் அந்த முதல் முயற்சியை கணக்கிட முடியாமல் நடுவர்கள் திணறிக் கொண்டிருந்தபோதே அடுத்த வீரர் ஈட்டி எறிய தயாரானதை அடுத்து சர்ச்சை எழுந்தது.
தவிர, மற்றொரு இந்திய வீரரான கிஷோர் ஜினா இரண்டாவது தடவையாக ஈட்டி வீசியபோது வெள்ளைக் கோட்டை கடந்து சென்று ஈட்டி வீசியதாக நடுவர் சிகப்பு கொடியை உயர்த்தினார்.
இதனால் அந்த தூரத்தை கணக்கிட முடியாது என்று கூறினர் இதனையடுத்து ரீ-ப்ளே பார்க்க கோரிக்கை வைக்கப்பட்டதை அடுத்து அவர் வெள்ளைக் கோட்டை தாண்டவில்லை என்பது உறுதியானது.
தொழில்நுட்ப காரணங்களைக் காட்டி நடுவர்கள் சர்ச்சை ஏற்படுத்தியபோதும் நீரஜ் சோப்ரா மற்றும் கிஷோர் ஜினா இருவரும் இந்த போட்டியில் முறையே தங்கம் மற்றும் வெள்ளிப் பதங்கங்களை வென்றனர்.
இருந்தபோதும் நடுவர்களின் இந்த சர்ச்சைக்குரிய முடிவு குறித்து எதிர்ப்பு தெரிவிக்க இந்திய அதிகாரிகள் முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஏற்கனவே மகளிருக்கான 100 மீ தடை தாண்டும் ஓட்டத்தில் கலந்து கொண்ட ஜோதி யர்ராஜி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து இந்திய அதிகாரிகள் புகார் அளித்ததைத் தொடர்ந்து அவருக்கு வெள்ளிப் பதக்கம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.