சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகளுடன் 2 நாள் மாநாடு நேற்று சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள கூட்டங்களில் நேற்று தொடங்கிய நிலையில், இன்று 2வது நாளாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர்களுடான ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், அமைச்சர்கள் மற்றும் துறை சார்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
நேற்றைய முதல்நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மாவட்ட வனத்துறை அதிகாரிகளோடு முதலமைச்சர் ஆலோசனை நடத்தி இருந்தார். அதைத்தொடர்ந்து நேற்று மாலை ஐபிஎஸ் அதிகாரிகளுடன் மட்டும் ஆலோசனை கூட்டம் நடத்திய நிலையில், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு குறித்து முதலமைச்சர் பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். மாவட்ட நிர்வாகம், சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட விவகாரங்களில் கடுமையாக இருக்கும்படி அறிவுறுத்தினார். நாடாளுமன்ற தேர்தலையொட்டி, சட்டம் ஒழுங்கில் தீவிர கவனம் செலுத்த வலியுறுத்தினார். அதைத்தொடர்ந்து, உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டதற்கான 2023-ஆம் ஆண்டிற்கான விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.
இதையடுத்து இன்று 2வது நாளாக மாவட்ட ஆட்சியர்கள் மட்டும் பங்கேற்கக்கூடிய ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இன்று காலை மற்றும் மாலை என இருவேளைகளில் ஆலோசனை நடைபெறவுள்ளது. சட்டம், ஒழுங்கு மற்றும் அரசு திட்டங்களின் நிலை குறித்து ஆலோசனை நடைபெறுகிறது. மேலும், காலை சிற்றுண்டி திட்டம், மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற்று வருகிறது.