சென்னை: சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் தமிழ்நாட்டின் பட்டியலின தலைவர்களாகாக கருதப்படும் விசிக தலைவர் திருமாவளவன், புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
பீகார் மாநில அரசைப் போல தமிழ்நாடு அரசும் சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ள வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
சாதிவாரி கணக்கெடுப்பு மக்களை பின்னோக்கி இழுத்துச் செல்லும் செயல்; தவறான நடைமுறை என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
சாதி சமயமற்ற இளைய தலைமுறையை உருவாக்குவதற்கு பதிலாக நாடு முழுவதும் மக்களிடையே வேற்றுமையை வளர்ப்பதில்தான் அரசியல் கட்சிகள் செயலாற்றி வருகின்றன. சாதி வாரியாக கணக்கெடுப்பை நடத்தவே வலியுறுத்தி வருகின்றன. இதற்கு பல்வேறு காரணங்களை கூறி வருகின்றன. மாநிலத்தில், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, தொழில் திறன், இடஒதுக்கீடு போன்றவற்றைப் பெறுவதற்கு சாதி வாரியான கணக்கெடுப்புகள் கட்டாயம் என கூறி வருகின்றன. இதைத்தான் தற்போது பீகார் மாநில அரசு சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தி தகவலை வெளியிட்டு உள்ளது.
இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான சட்டமேதை அம்பேத்கர்தான், நாடு சுதந்திரம் அடைந்த காலக்கட்டத்தில், சாதிய அடிப்படையில் இடஒதுக்கீடு அளிக்கவேண்டும் என்று சட்டத்திருத்தம் கொண்டு வந்தார். ஏனென்றால், அக்காலத்தில் உயர் சாதியினருக்கு படிப்பறிவு இருந்ததாகவும், தாழ்ந்த (பட்டியல் இனத்தவர்கள்) சாதியினருக்கு அவ்வளவு கல்வி அறிவு இல்லாத காரணத்தினால் அவர்களால் கற்றவரிடம் போட்டி போட்டு வேலைக்கு செல்ல முடியாது. அதனால், இந்த வேறுபாட்டை களைவதற்கே அம்பேத்கர் அவர்கள் இடஒதுக்கீட்டு முறையை பரிந்துரைப்பதாக கூறியிருந்தார். மேலும், இந்த இடஒதுக்கீடு, ஒன்று இரண்டு தலைமுறைகளுக்கு பிறகு மறுஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.
ஆனால், நமது நாட்டின் அரசியல் கட்சிகள் மக்களிடையே ஒற்றுமை ஏற்பட்டு விடக்கூடாது என்று கருதி, தங்களின் அரசியல் லாபத்துக்காக மக்களிடையே சாதிய அடிப்படையிலான வேற்றுமையை வளர்த்து வருகின்றன. சாதி வாரியாக ஒதுக்கீடு நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. இதன்மூலம் மக்களிடையே வேறுபாடுகள் அதிகரிக்கிறதே தவிர, குறைவதற்கான வாய்ப்பு இல்லை. ஆனால், அரசியல் கட்சிகள் இதுதான் சமத்துவம் என்று கூறி மக்களை ஏமாற்றி வருகின்றன.
அனைவருக்கும் கல்வி அறிவு வேண்டும் என்ற எண்ணம் அனைத்து மக்களிடம் வர வேண்டும். இதற்கான அடிப்படை தேவையகளை ஆட்சியாளர்கள் திறம்பட நிறைவேற்றி னாலே, சாதி மத வேற்றுமை அகற்றப்பட்டு விடும். ஆனால், அரசே, சாதி மத வேறுபாடுகளை ஊக்குவிக்கும் வகையில், பிரிவினைகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில்தான் பீகார் மாநில அரசு, சாதிவாரியாக மக்கள் தொகை கண்கெடுப்பை நடத்தி வெளியிட்டு உள்ளது. இதற்கு எதிர்ப்பும், ஆதரவும் வந்துகொண்டிருக்கிறது.
இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் பட்டியலின மக்களுக்காக பாடுபடுகிறோம் என்று கூறிக்கொள்ளும் விடுதலை சிறுத்தைகள் மற்றும் புதிய தமிழகம் கட்சிகளின் தலைவர்கள் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்து உள்ளனர்.
இது தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்; பீகார் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்கள் இப்பொழுது வெளியாகி உள்ளன. மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினர் 36 % பிற்படுத்தப்பட்டோர் 27 % பட்டியல் சமூகத்தவர் 20% பழங்குடியினர் 1.6 % இருப்பது தெரியவந்துள்ளது. பொதுப் பிரிவினர் 15.5 % மட்டுமே இருப்பது தெரிய வந்திருக்கிறது. தற்போது பீகாரில் பட்டியல் சமூகத்திற்கு 16 % பழங்குடியினருக்கு 1% மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 12% பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 18 % இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
63 சதவீதம் உள்ள பிற்படுத்தப்பட்டோர் 30 சதவீத இடத்தை மட்டுமே இப்போது பெறுகின்றனர். 15.5% உள்ள பொதுப் பிரிவினர் 50% இட ஒதுக்கீட்டை அனுபவிக்கின்றனர். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்த பின்னரும் கல்வியில், வேலைவாய்ப்பில், அரசியல் பிரதிநிதித்துவத்தில் உரிய இடங்களைப் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் பெற முடியாத நிலை தொடர்ந்து வருகிறது. இது மாபெரும் சமூக அநீதியாகும். எஸ்சி- எஸ்டி பிரிவினரின் மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்றாலும் 50% உச்சவரம்பு விதிக்கப்பட்டதால் அவர்களுடைய இட ஒதுக்கீடும் உயர்த்தப்பட முடியாத நிலை உருவாகிவிட்டது. 10 சதவீதம் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு பிறகு 50 சதவீத இட ஒதுக்கீடு உச்சவரம்பை உயர்த்த வேண்டும் என்ற குரல்கள் வலுவாக எழுந்தன.
ஆனால், ஒன்றிய பாஜக அரசு அதைப் பொருட்படுத்தவில்லை. பல்வேறு மாநில அரசுகள் இட ஒதுக்கீட்டின் அளவை உயர்த்த முற்பட்ட போதெல்லாம் உச்ச நீதிமன்றம் பிற்படுத்தப்பட்டோரின் மக்கள் தொகை குறித்த போதிய தரவுகள் இல்லை எனக்கூறி அதை நிராகரித்தது. இந்நிலையில் சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ள வேண்டும் என்று வலுவான குரல் எழுந்தது. அதன் காரணமாகவே ஒன்றிய பாஜக அரசு மக்கள் தொகைக் கணக்கெடுப்பையே நடத்தாமல் ரத்து செய்துள்ளது. உயர்சாதியினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவதற்கு காட்டிய ஆர்வத்தை பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் சமூகத்தினரின் இட ஒதுக்கீட்டில் ஒன்றிய அரசு காட்டவில்லை. ஒன்றிய பாஜக அரசு முழுக்க முழுக்க உயர் சாதியினரின் நலனைக் காப்பாற்றுவதாகவே உள்ளது என்பதற்கு இதுவே ஒரு சான்றாகும்.
இந்தச் சூழலில் வெளியாகி உள்ள பீகார் மாநில சாதிவாரி சர்வே இந்தியா முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்ட, பட்டியல் சமூக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும். அரசு நிர்வாகத்திலும், உயர்கல்வியிலும், தொடர்ந்து தாங்கள் புறக்கணிக்கப்படுவது இனிமேலும் அவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இந்து என்கிற பெயரில் பாஜக – ஆர்.எஸ்.எஸ் நடத்தும் அரசியல் உயர் சாதியினரின் நலனுக்கானது தான் என்பது இப்போது வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது. ஒன்றிய பாஜக அரசு இனிமேலும் சாக்குப் போக்கு சொல்லாமல் உடனடியாக சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும். இட ஒதுக்கீடு வழங்கும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கு அளிக்கும் விதமாக எதிர்வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரிலேயே சட்டம் இயற்ற வேண்டும்.
பீகார் மாநில அரசு மேற்கொண்டதைப் போலவே தமிழ்நாடு அரசும் சாதிவாரி கணக்கெடுப்பு ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். அத்துடன் தமிழ்நாட்டில் உள்ள எஸ்சி, எஸ்டி பிரிவினரின் இட ஒதுக்கீட்டு அளவை அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப 21% ஆக உயர்த்த வேண்டும். பீகார் மாநில அரசு மேற்கொண்டிருப்பதைப் போல எஸ்சி, எஸ்டி பிரிவினருக்குப் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு அளிப்பதற்கும்; தனியார் துறையில் இட ஒதுக்கீடு அளிப்பதற்கும் தமிழ்நாடு அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, சாதிவாரி கணக்கெடுப்பது தேவையற்றது, சாதிவாரி கணக்கெடுப்பு மக்களை பின்னோக்கி இழுத்துச் செல்லும் செயல்; தவறான நடைமுறை என கூறியதுடன், சமுதாயத்தில் சாதி ஒழிப்பு நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
சாதிவாரி கணக்கெடுப்பை நாங்கள் ஆதரிக்கவில்லை. நம் நாடு சுதந்திரம் அடைந்து 76 ஆண்டுகள் முடிந்து 77வது ஆண்டில் இருக்கிறோம். இந்த சமயம் சாதிவாரியாக பார்த்து கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது, நாட்டை பின்னோக்கி இழுத்து செல்லும் செயல் ஆகும்.
இன்னும் மக்களை மதம், சாதி, மொழி, இனம் ரீதியில் பிரிப்பது எந்த வகையில் ஏற்புடையது என்று தெரியவில்லை. மக்களுக்கு சமத்துவமும், சமஉரிமையையும் கொடுப்பது உள்ளாட்சி , மாநில அரசு, மத்திய அரசின் கடமையாகும். பொதுமக்களின் தேவைகளை செய்ய தவறிவிட்டு, இப்போது சாதி ரீதியாக கணக்கெடுப்பு நடத்தி என்ன செய்ய போகிறீர்கள் என தெரியவில்லை. இதன் மூலம் மக்களுக்கு என்ன சொல்ல வருகிறீர்கள் என தெரியவில்லை. சாதிரீதியிலான கணக்கெடுப்பு என்பது தவறான நடைமுறை ஆகும் என தனது கருத்தை கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
அடுத்ததாக, தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி பற்றியும், அதிமுக – பாஜக கூட்டணி முறிவு பற்றியும் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி பேசுகையில் 2019 நாடளுமன்ற தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தல் என இரு தேர்தல்களிலும் அதிமுக தலைமையில் தான் தமிழகத்தில் கூட்டணி அமைக்கப்பட்டது. தேசிய அளவில் பாஜக தலைமை என்றாலும், தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக தான் தலைமை. தற்போது அதிமுகவே கூட்டணியில் இருந்து விலகிவிட்டதால் , தேசிய ஜனநாயக கூட்டணி தற்போது இல்லை. தமிழகத்தில் NDA கூட்டணியில் நிலையற்ற தன்மையாக உள்ளது என்று தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
ஏற்கனவே பல ஆண்டுகளாக சாதிய இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, அவரவர் மக்கள்தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு வேண்டும் என வலியுறுத்தி வருகிறார். இதுதொடர்பாக அவர் கடந்த 2017ம் ஆண்டு, ஊடகம் ஒன்றுக்கு அளித்த பட்டியின்போது, இங்கே பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் எல்லாம் ஒரே சாதியாகப் பார்க்கப்படுவ தில்லை. அவர்கள் இடஒதுக்கீட்டை அனுபவித் தாலும், வெளியே நாங்கள் வன்னியர், தேவர், நாடார் என்று கௌரவமாகச் சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால், துரதிர்ஷ்டவசமாகத் தாழ்த்தப்பட்டோர் அனைவரும் ஒரே சாதியினராகப் பார்க்கப்படுகிறார்கள்.
தாழ்த்தப்பட்டவர்களை ஒரே பட்டியலாக அறிவித்தது அம்பேத்கர் செய்த தவறு. இரட்டை வாக்குரிமை கேட்டு காந்தியிடம் போராடிய அவர், இன்றைய தனித் தொகுதி முறையை ஒப்புக்கொண்டதும் தவறு. அவரது முடிவுகள் அன்றைய காலத்துக்கு உவப்பானதாக இருந்திருக்கலாம். இன்று இந்தத் தனித் தொகுதி முறையால் தாழ்த்தப்பட்டோருக்கு என்ன நன்மை விளைந்துவிட்டது? அவர்களால் கட்சிக் கட்டுப்பாட்டை மீறித் தங்கள் சமூகத்துக்காகப் பேச முடிகிறதா? எனவே, தனித் தொகுதியும் தேவையில்லை. இது எனது கருத்து மட்டுமல்ல, இதே கருத்தோடு இன்னும் பல தலித் அமைப்புகள் வருவார்கள் என்று கூறியிருந்தார்.