டெல்லி: நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள வரலாற்று சிறப்பு மிக்க மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு  குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கிய நிலையில், இந்த மசோதா குறித்த அறிவிப்பு  மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டு உள்ளது.

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடரில் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசால் கொண்டு வரப்பட்டு,  இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுடக்கு ஓவைசி மற்றும் அவரது கட்சியை சேர்ந்த மற்றொரு எம்.பி ஆகிய 2 பேர் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அனைத்துக்கட்சிகளின் ஆதரவுடன்  ஒருமனதாகே மசோதா நிறைவேற்றப்பட்டது.

இதைத்தொடர்ந்து, இந்த மசோதா குடியரசு துணைத்தலைவர் மற்றும்  குடியரசு தலைவர் ஒப்புதல் பெற அனுப்பி வைக்கப்பட்டது. முதலில், , மாநிலங்களவைத் தலைவரும், துணை குடியரசுத் தலைவருமான ஜெக்தீப் தன்கர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. அதற்கு அவர் ஒப்புதல்  அளித்த நிலையில், பின்னர் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவருக்கும் பெண்கள் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கினார். இதையடுத்து, இந்த மசோதா நடைமுறைக்கு வருவது தொடர்பாக, மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டு உள்ளது.

நாடாளுமன்றம், சட்டமன்றம் ஆகியவற்றில் மகளிருக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா, 1996-ம் ஆண்டு காங்கிரஸ் அரசால் கொண்டு வரப்பட்டது. ஆனால், காங்கிரஸ் ஆட்சியாளர்களால் இந்த மசோதாவை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டப்படவில்லை.  பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க. அரசில் 6 முறை கொண்டு வரப்பட்டும், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்து இம்மசோதாவை நிறைவேற்ற விடவில்லை. இதனால், கடந்த 27 வருடங்களாக பெண்கள் மசோதா நிறைவேற்றப்படாமல் இருந்து வந்தது. இதை வைத்து காங்கிரஸ் உள்பட பல கட்சிகள் அரசியல் செய்து வந்தன.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற  முடிவு செய்தது. குறிப்பாக, புதிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் முதல் மசோதாவாக பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா இருக்க வேண்டும் என்று விரும்பினர். எனவே, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் தொடங்கு வதற்கு முதல் நாள் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இதையடுத்து, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் கடந்த 18-ம் தேதி தொடங்கிய நிலையில், விநாயகர் சதுர்த்தி சிறப்பு பூஜைகள் முடிந்து மறுநாள் புதிய நாடாளுமன்றத்துக்கு கூட்டம் இடம்பெயர்ந்தது. அப்போது, புதிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் முதல் மசோதாவாக மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், இம்மசோதாவுக்கு ஆதரவாக 454 நாடாளுமன்ற உறுப்பினர்களும், எதிராக 2 உறுப்பினர்கள் மட்டும் வாக்களித்தனர்.

இதைத் தொடர்ந்து, இம்மசோதா பெரும்பான்மை பலத்துடன் நிறைவேறியது. இதையடுத்து, கடந்த 21-ம் தேதி மாநிலங்களவையில் இம்மசோதா தாக்கல் செய்யப்பட்டது. சுமார் 11மணி நேரம் விவாதத்திற்குப் பிறகு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் இம்மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. இதைத் தொடர்ந்து, குரல் வாக்கெடுப்பு மூலம் 215 உறுப்பினர்களின் ஆதரவுடன் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறியது.

இதையடுத்து, மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவில் மாநிலங்களவைத் தலைவரும் ,துணை குடியரசுத் தலைவருமான ஜெக்தீப் தன்கர் ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டிருந்தார். இந்த நிலையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டிருக்கிறார். இதைத் தொடர்ந்து, இம்மசோதா சட்டமாக்கப்பட்டு, மத்திய அரசிதழிலும் வெளியிடப்பட்டிருக்கிறது.