சென்னை: கோடம்பாக்கம் முதல் போரூர் வரை சாலை பழுதுபார்க்கும் பணிகள் விரைவில் முடிக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னையில் மெட்ரோ ரயில் பணிகளால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. அத்துடன் சாலை பணிகள், மழைநீர் வடிகால் பணிகள் என எந்தவொரு பணிகளும் முழுமையாக முடிவடையாததால், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். சமீப காலமாக அவ்வப்போது பெய்து வரும் மழையால், சாலைகளில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.
குறிப்பாக, வடசென்னையின் பெரும் பகுதிகள் மற்றும், கோடம்பாக்கம் முதல் போரூர் வரையிலான சாலைகளில் கடுமையான வாசன நெரிசல் ஏற்பட்டு வருகிறது. சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், போரூர், ராமாவரம், நந்தம்பாக்கம் போன்ற பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சென்னை டி.எல்.எப் போரூர் வளாகத்தில் ஒரு லட்சம் தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் அதிக அளவில் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்துகின்றனர் இதனால் கடும் நெரிசல் ஏற்படுகிறது. இது மக்களிடையே ஆட்சியாளர்கள்மீது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், கோடம்பாக்கம் முதல் போரூர் வரையிலான சாலை பணிகள் விரைவில் முடித்து, வாகன நெரிசல் தவிர்க்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. கோடம்பாக்கம் முதல் போரூர் வரையிலான ஆற்காடு சாலையில் 13.3 கி.மீ நீளத்திற்கு சாலையை பழுதுபார்க்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாகவும், இரவு மற்றும் பகல் நேரங்களில் அவ்வப்போது பெய்துவரும் வடகிழக்கு பருவமழையின் காரணமாக சாலை பழுதுபார்க்கும் பணி முடிப்பதில் தாமதம் ஏற்படுவதாகவும் சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோடம்பாக்கம் முதல் போரூர் வரையிலான ஆற்காடு சாலையில் வடபழனி, சாலிகிராமம், சாலிகிராமம் கிடங்கு, வளசரவாக்கம், ஆழ்வார் திருநகர், காரம்பாக்கம் மற்றும் ஆலபாக்கம் ஆகிய பகுதிகளில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் ஒப்பந்ததாரரான லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனத்தின் மூலம் சாலை பழுதுபார்க்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
தார்சாலை பணிகள் மழை பெய்யும் காலத்தில் செய்ய இயலாத காரணத்தினாலும், வடகிழக்கு பருவமழை வழக்கம்போல் இல்லாமல் முன்னதாகவே எதிர்பாராமல் இரவு நேரங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. எனவே, இரவு நேரங்களில் மழை பெய்யாத ஒரு வார காலத்தில் சாலை பழுதுபார்க்கும் பணிகள் அனைத்தும் முழுமையாக முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணிகள் இரவு நேரங்களில் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளது.