டில்லி
உச்சநீதிமன்றத்தில் அதிமுக பொதுக் குழு விவகாரம் குறித்து ஓ பன்னீர் செல்வம் மேல் முறையீடு செய்துள்ளார்.
சென்ற ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என்றும், பொதுச் செயலாளர் தேர்தலுக்குத் தடை விதிக்கக் கோரியும் ஓ.பன்னீர்செல்வம், அவருடைய ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதிமுகவில் இருந்து தங்களை நீக்கியது செல்லாது என அறிவிக்கவும் வலியுறுத்தி இருந்தனர்.
மனுக்களை விசாரித்த தனி நீதிபதி, அதிமுக பொதுக்குழு மற்றும் தீர்மானங்களுக்குத் தடை விதி மறுத்துவிட்டார். சென்னை உயர்நீதிமன்றத்தின் கோட்ட அமர்வில், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்து வழக்கை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் அமர்வு விசாரித்தது.
கடத மாதம் 25 ஆம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் உச்சநீதிமன்றம் பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்துள்ளதால், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்குத் தடை விதிக்க முடியாது என்று கூறி மனுக்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்., ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரைக் கட்சியில் இருந்து நீக்கிய சிறப்புத் தீர்மானத்துக்கும் தடை விதிக்க மறுப்பு தெரிவித்துவிட்டனர்.
தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓ பன்னீர் செல்வம் மேல் முறையீடு செய்துள்ளார். ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்டால் தனது தரப்பு கருத்தையும் கேட்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கேவியட் மனுவைத் தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.