டில்லி

மல்லிகார்ஜுன கார்கே மணிப்பூர் முதல்வரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

தற்போது மணிப்பூர் மாநிலத்தில் நிலவி வரும் சூழ்நிலைக்கு பாஜக தான் காரணம் எனக் குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அம்மாநில முதல்வர் பிரேன் சிங்கை பதவி நீக்கம் செய்ய வேண்டுமெனப் பிரதமர் மோடியை வலியுறுத்தியுள்ளார்.

கார்கே எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

“அழகிய மணிப்பூர் மாநிலம் போர்க்களமாக மாறியதற்கு பாஜக தான் காரணம். இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை ஆயுதம் ஏந்தியிருப்பது இப்போது வெளிப்படையாக தெரிகிறது. மணிப்பூர் மக்கள் 147 நாட்களாக அவதிப்படுகின்றனர், ஆயினும் பிரதமர் மோடிக்கு அந்த மாநிலத்திற்குச் செல்ல நேரமில்லை.

வன்முறையில் மாணவர்கள் குறிவைக்கப்பட்ட கொடூரமான படங்கள் மீண்டும் ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன. இது பாஜகவின் திறமையற்ற மணிப்பூர் முதல்வரைப் பிரதமர் மோடி பதவி நீக்கம் செய்ய வேண்டிய தருணம் . இது எந்த ஒரு குழப்பத்தையும் கட்டுப்படுத்த முதல் படியாக இருக்கும்” 

எனத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் பா.சிதம்பரம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

“மணிப்பூரில் நிலைமை மோசமாகிவிட்டது, மாநில அரசு மீதும், முதல்-மந்திரி பிரேன் சிங் மீதும் எந்த பிரிவினருக்கும் நம்பிக்கை இல்லை. எனவே அவரை பதவியில் இருந்து அகற்ற வேண்டும்” 

எனக் குறிப்பிட்டுள்ளார்.