சென்னை: உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் காவிரியில் தண்ணீர் திறந்துவிட மறுத்து வரும் கர்நாடக மாநில காங்கிரஸ் அரசுக்கு எதிராக, வரும் 30ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் நாம் தமிழர் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்து உள்ளார்.
தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய காவிரி நீரை தர கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு மறுத்து வருகிறது. இதுகுறித்து கூட்டணி கட்சியான திமுக அரசு, அம்மாநில அரசுடன் பேச தயங்கி மத்தியஅரசையும், நீதிமன்றத்தையும் நாடி தண்ணீரை திறந்துவிட உத்தரவிடக்கோரி வலியுறுத்தி வருகிறது. அதன்படி, காவிரியில் இருந்து உரிய அளவிலான தண்ணீரை திறக்க வேண்டும் என காவிரி ஒழுங்காற்று மையம், காவிரி மேலாண்மை வாரியம், உச்சநீதிமன்றம் ஆகியவை உத்தரவிட்டு உள்ளது.
ஆனால், தண்ணீரை திறந்துவிட முடியாது என கர்நாடக மாநில அரசு கூறி வருகிறது. தங்களிடம் போதிய அளவு தண்ணீர் இல்லாததால், தமிழகத்திற்கு தண்ணீர் தர இயலாது என மீண்டும் மீண்டும் கூறி வருகிறது. மேலும் கர்நாடகாவில் உள்ள சிறிய கட்சிகளை தூண்டி விட்டு, தமிழ்நாடு அரசுக்கு எதிராக போராட்டத்தை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், காவிரி நதிநீர் உரிமையை மீட்க அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நாம் தமிழர் கட்சி சார்பாக வரும் 30ந்தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடததப்பட இருப்பதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழகத்திற்கான நீரினைத் திறந்துவிட மறுக்கும் கர்நாடகா மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் அரசைக் கண்டித்தும், தமிழகத்திற்கான உரிமைகளைப் பெற்றுத்தராமல் காலம் தாழ்த்தி வரும் இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் தமிழர் விரோதப்போக்கைக் கண்டித்தும்,
தமிழ்நாட்டின் காவிரி நதிநீர் உரிமையை நிலைநாட்ட திறனற்ற தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசைக் கண்டித்தும் வருகின்ற 30-09-2023 அன்று காலை 10 மணியளவில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நாம் தமிழர் கட்சி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்குமாறு தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பேரறிவிப்பு செய்துள்ளார்.”
“எனவே, கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட தொகுதி உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் ஒருங்கிணைந்து, திட்டமிட்டு களப்பணியாற்றி, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் இம்மாபெரும் போராட்டத்தினை பேரெழுச்சியாக முன்னெடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.