சென்னை: தமிழ்நாட்டில் இன்று 10 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்ற வருகிறது. சென்னை, காஞ்சி மாவட்டங்களில் 10 க்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வருமான வரித்துறை, அமலாக்கத்துறை சோதனைகள் தொடர்ந்து வருகின்றன. கடந்த வாரம் 40க்கும் மேற்பட்ட இடங்களில் வரி ஏய்ப்பு காரணமாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், இன்று அதிகாலை முதல் சென்னை உள்பட பல இடங்களில் வருமனா வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற்று வருகிறது. செல்போன் உதிரி பாகம் தயாரிக்கும் நிறுவனமான ஃப்ளெக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வரி ஏய்ப்பு தொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையில், வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஃப்ளெக்ஸ் தொழிற்சாலையிலும் வருமானவரித் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சென்னையில் உள்ள ஃப்ளெக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான மற்றும் தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர் .
ஃப்ளெக்ஸ் நிறுவனத்ம அமெரிக்காவைச் சேர்ந்த ஒப்பந்த உற்பத்தியாளர் நிறுவனமாகும். இதற்கு தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் கிளைகள் உள்ளன. இந்நிறுவனத்தில் மொபைல் போன்கள், அதன் உதிரி பாகங்கள், மற்றும் செல்போனுக்கு தேவையான பாகங்கள், இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (IoT) உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கால் பதித்துள்ள இந்நிறுவனம், தொலைத்தொடர்புக்கான உதிரி பாகங்களையும் தயாரித்து வருகிறது. எலக்ட்ரானிக் உதிரி பாகங்கள் தயாரிப்பில், ஃபிளெக்ஸ் நிறுவனம், இந்தியாவில் உள்ள பிற உற்பத்தியாளர்களை விட முன்னணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிறுவனம் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கூறி வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.